பிரம்மாண்ட பொருட்செலவில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம், கடந்த மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், இரண்டாம் பாகம் வெளியான சில நாட்களிலேயே சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. இத்திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்தி வைக்கக் கோரி வழக்கறிஞர் ஷிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்
தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 15-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ‘துரந்தர் 2’ திரைப்படத்தில் அரசியல் ரீதியாக ஒரு சார்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேர்தல் முடியும் வரை இப்படத்தைத் திரையிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பின் வெளியிட அனுமதிக்கலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
இந்த முறையீட்டைப் பரிசீலித்த நீதிபதிகள், திரைப்படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினர். எனவே, இது குறித்து முறையான மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, அதன் பிறகு முறையீடு செய்யும்படி வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.
LIVE 24 X 7









