அனிருத் – காவ்யா மாறன் இருவரும் நீண்டகாலமாகக் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளனர். நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 21-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காவ்யாவின் பெற்றோர்களான கலாநிதி மாறன், காவேரி மாறன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அண்மையில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து, கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அனிருத் – காவ்யா மாறன் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் என பலரையும் இத்திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.
ரூ.24,600 கோடி சொத்து… மாறன் குடும்பத்தின் பின்னணி!
இந்த நிலையில், திருமணம் உறுதியானது பலரையும் கவனிக்க வைத்திருப்பது கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு. 2026 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் ரூ.24,600 கோடி சொத்து மதிப்புடன் அவர் 146-வது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவரான கலாநிதி மாறனின் குடும்பச் செல்வத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது சன் டிவி நெட்வொர்க்.
அதுமட்டுமல்ல… ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மாறன் குடும்பத்தின் வசம் உள்ளது. அந்த அணியின் மதிப்பு ரூ.17,500 கோடி முதல் ரூ.18,400 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் அணிகளின் மதிப்பீட்டில் இது நான்காவது இடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்தக் காவ்யா மாறன்?
காவ்யா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இணை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார். பிரிட்டனில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. படிப்பை முடித்த அவர், 2019-ம் ஆண்டு சன் டிவி நெட்வொர்க்கில் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்பை ஏற்றார். அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.409 கோடி என மதிப்பிடப்படுகிறது.
அனிருத் சொத்து மதிப்பு ரூ.60 கோடி!
அனிருத் ரவிச்சந்தரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.60 கோடி எனக் கூறப்படுகிறது. ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலமான அனிருத், தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். திரைப்படப் பாடல்கள், பின்னணி இசை, நேரடி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அவரது வருமானத்தின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
இந்த மதிப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், காவ்யாவின் சொத்து மதிப்பு அனிருத்தின் சொத்து மதிப்பைவிட சுமார் 6.7 முதல் 8.3 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரூ.550 கோடி வரை செல்லும் ஜோடியின் சொத்து மதிப்பு!
அனிருத்தின் சொத்து மதிப்பான ரூ.60 கோடியையும், காவ்யாவின் மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பான ரூ.400–500 கோடியையும் சேர்த்தால், இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.460 கோடி முதல் ரூ.560 கோடி வரை இருக்கலாம்.
இது ஊடக மதிப்பீடுகளின் அடிப்படையிலான கணக்கு மட்டுமே. கலாநிதி மாறனின் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் காவ்யாவின் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது.
இசையமைப்பாளர் அனிருத்தின் வெற்றிப் பயணமும், தொழில் நிர்வாகத்தில் காவ்யா மாறனின் பங்களிப்பும் இணையும் இந்தத் திருமணம், சொத்து மதிப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
LIVE 24 X 7









