பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
By Christon 23 Mar 2026, 05:11 AM Last Update : 23 Mar 2026, 05:11 AM
சென்னை அசோக் நகர் 2-வது அவென்யூ பகுதியில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா வேன் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதற்குள் பத்து ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடித் தற்காப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட விரிவான சோதனையில், அவை அனைத்தும் சினிமாவில் பயன்படுத்தப்படும் 'டம்மி' துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது.
லோகேஷ் கனகராஜ் படத்திற்காகப் பயன்பாடு
இது குறித்து வேன் ஓட்டுநர் மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'டிசி' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இவை கொண்டு செல்லப்பட்டது உறுதியானது. வடபழனியில் இருந்து படப்பிடிப்புத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வரும் வழியில் இச்சோதனை நடந்துள்ளது.
ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் விடுவிப்பு
சினிமா படப்பிடிப்பிற்காக டம்மி துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான முறையான உரிமம் (License) மற்றும் அதற்கான ஆவணங்களை வேன் ஓட்டுநர் அதிகாரிகளிடம் காண்பித்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து திருப்தியடைந்த தேர்தல் பறக்கும் படையினர், சோதனை விவரங்களைப் பதிவு செய்து கொண்டு வேனை மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.