மகா விஷ்ணு விவகாரம்: ”ஒரு பூனையை புலியாக்கிய பெருமை திமுக அரசுக்கு..” நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்

BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy : மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

Sep 7, 2024 - 17:35
Sep 7, 2024 - 17:47
 0
மகா விஷ்ணு விவகாரம்: ”ஒரு பூனையை புலியாக்கிய பெருமை திமுக அரசுக்கு..”  நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்
BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy

மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy : மகா விஷ்ணு என்ற நபர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தியுள்ளார். மேலும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை அவர் மாணவர்களிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் இதுபோன்ற கருத்துக்களை கூறக்கூடாது என்று அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் மகாவிஷ்ணு, உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

''அரசு பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும்; எந்த ஒரு மதத்தையும், எந்த ஒரு அமைப்பையும் இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்திய நபர் மீதும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ''எனது பள்ளிக்கு வந்து எனது ஆசிரியரை அவமானப்படுத்திய அந்த நபரை நான் சும்மா விட மாட்டேன். இனிமேல் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோர் பணியிடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விமான நிலையத்தில் வைத்தே விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மகா விஷ்ணு கைது செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் ஆசம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி. ”மகா விஷ்ணு கைது எதிர்பார்த்தது தான்.  ஆனால் சுய சிந்தனையோ,  சட்ட அறிவோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் அவசர   நடவடிக்கை இது.  உயர்நீதிமன்றத்தில் இ‌ந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது,  திமுக அரசு தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளினால் பல்வேறு வழக்குகளில் நீ‌திப‌திக‌ளிடம் இதுவரை குட்டுப்பட்டதை விட அதிகமாக, மிக அழுத்தமாக தற்போது விமர்சிக்கப்படும்.  தானே  பேச அழைத்து, தானே பேசியது தவறு என வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு!” என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow