அரசியல்

Annamalai : விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரிதல்ல.. மக்களுக்கு அல்வா கொடுக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

BJP Annamalai About TVK Vijay : தைப்பூசத்திற்கு விஜய் வாழ்த்து சொல்வது ஒன்று பெரிதல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அல்வா கொடுக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai : விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரிதல்ல.. மக்களுக்கு அல்வா கொடுக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்
விஜய்-அண்ணாமலை-மு.க.ஸ்டாலின்

BJP Annamalai About TVK Vijay : தைப்பூசம் திருநாள் நேற்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து முருகன் கோயில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தைப்பூசத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இந்நிலையில், தைப்பூச(Thaipusam) திருநாளையொட்டி நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(Annamalai), திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். பழனி மலை அடிவாரத்தில் இருந்து மயில் காவடியை சுமந்தபடி படிப்பாதை வழியாக மலையேறி முருகனை வழிப்பட்டார். இவருடன் பாஜக தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, தைப்பூசத்திற்கு எல்லோரும் தான் வாழ்த்து தெரிவிக்கிறார்கள் விஜய் வாழ்த்து தெரிவிப்பது பெரிதல்ல. விஜபி ஒருவர் வாழ்த்து தெரிவித்தால் அது சிறப்பா? வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி தான் என்று கூறினார். பிரதமர் பிரான்ஸில் இருந்து வாழ்த்து தெரிவிக்கிறார். மக்கள் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நம் பிரதமர் மீது இருக்கும் மதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்(TVK Vijay), அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும் நாங்கள் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். மக்களை சந்தித்தால் அவர்கள் பிரச்சனைகளை கூறுவார்கள். அதை தீர்த்தால் தான் அது அரசியல். ஏசி அறையில் இருந்து கொண்டு அரசியல் ஆலோசகரை பக்கத்தில் வைத்துவிட்டு அரசியல் செய்யக் கூடாது.

ஏசி அறையில் இருந்து கொண்டு அரசியலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைத்தால் வருகின்ற காலத்தில் அவர்களுக்கு மக்கள் சொல்லுவார்கள். எல்லா மநிலத்திற்கும் நிதி கொடுத்திருக்கிறார்கள். நம் மாநிலத்திற்கு நிதி கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிதியை மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு மடை மாற்றிவிடுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய்.

இந்த ஆண்டு எல்லா மாநிலத்திற்கும் நிதி கொடுக்கவில்லை. சில மாநிலங்களுக்கு தான் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ’பிஎம் ஸ்ரீ’  பள்ளிக்கும் சமக்ரா சிக்‌ஷா நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், திமுக இரண்டையும் கலந்து பேசி தமிழகத்தை மட்டும் மத்திய அரசு வஞ்சிப்பதாக பொய் சொல்கிறார்.

முதலமைச்சர் எதற்காக அவசர அவசரமாக திருநெல்வேலி இருட்டுக் கடையில் போய் அல்வா சாப்பிட்டார்..? தமிழக மக்களுக்கு மூன்று ஆண்டுகளாக அல்வா கொடுத்து கொண்டிருக்கிறேன் என்பதை சொல்வதற்காக. நிரந்தர பணி, செவிலியர்களுக்கு பணி, விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று மக்களுக்கு அல்வா கொடுத்தார். அல்வா கொடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி மூன்றரை ஆண்டுகளாக மாறியுள்ளது என்று கூறினார்.