புதிய நபர்களை பார்த்து பாஜக பயப்படாது.. விஜயை தாக்குகிறாரா அண்ணாமலை?
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை திரும்பினார். மூன்று மாத படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய இவருக்கு விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, உச்சத்தில் இருந்த நடிகரான விஜய் தற்போது அரசியலில் குதித்துள்ளார். அவரின் வருகையை வரவேற்கிறோம். விஜய்
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் கொள்கை திராவிட கொள்கையோடு தான் ஒற்றுப்போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
தொடர்ந்து, விஜய் 25 ஆண்டுகளாக படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அரசியல் களம் என்பது வேறு 365 நாளும் களத்தில் இருக்க வேண்டும். அக்டோபர் 28-க்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார். புதியவர்களை பார்த்து பாஜக-விற்கு பயம் இல்லை. தமிழகத்தில் இன்று திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளது. பாஜகனுடைய தேசிய வாக்கு அதிகரித்து கொண்டே போகிறது. விஜயை கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். அடுத்த ஓராண்டு காலம் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் நிர்ணயிப்பார்கள் என்று கூறினார்.
உதயநிதி முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் அமைச்சரானார். தற்போது துணை முதல்வராக இருக்கிறார். உதயநிதி செயல்பாடு குறித்து எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். விஜய்யை பொருத்தவரை தமிழகத்தில் இன்று திராவிட கட்சிகள் பேசக்கூடிய அதே சித்தாந்தத்தை தான் பேசுகிறார். புதியதாக ஏதும் இல்லை. இந்தியாவில் இரண்டு கட்சிகள் தான் வித்தியாசமான முறையில் பயணிக்கிறார்கள். ஒன்று ஆம் ஆத்மி மற்றொன்று திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிரபராதியை கொண்டாடுவது போல செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
முன்னதாக அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டினர். "ஐ அம் பேக்", "நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்ற வாசகங்களுடன், பாஜக கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் மத்திய மாநகர தலைவர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தி உள்ளனர். இந்த போஸ்டர்கள் கரூர் நகரம், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், ராயனூர், காந்திகிராமம் உட்பட பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?