தமிழ்நாடு

விசிக மகளிர் மாநாடு களேபரம்: தள்ளு முள்ளு..நாற்காலி வீச்சு..மகளிர் போலீசுக்கு நேர்ந்த கொடுமை..

விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது

விசிக மகளிர் மாநாடு களேபரம்: தள்ளு முள்ளு..நாற்காலி வீச்சு..மகளிர் போலீசுக்கு நேர்ந்த கொடுமை..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை சோதனை செய்ததில் அனைவரும் விஷச்சாராயம் குடித்தது தெரியவந்தது. 

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சுமார் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், விஷச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பானவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதுமே நடக்ககூடாது என்றால் அதற்கு தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமில்லாமல், இந்த மாநாட்டில் மதுவிலக்கு வேண்டும் என நினைக்கும் அதிமுக உட்பட எந்தக் கட்சியினரும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதனால் கூட்டணிக் கட்சியான திமுகவுக்குள் சில சலசலப்பு ஏற்பட்டன. 

இதற்கு விளக்கம் தெரிவித்த திருமாவளவன், “விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம். இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல். தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும். மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது. இந்த மாநாட்டை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனிராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட தோழமை கட்சியினர் கருத்துரை ஆற்றுகின்றனர்.

இந்த மாநாட்டினை பெண்களே ஏற்று நடத்துகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மது மற்றும் போதை பொருட்களை முற்றாக ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் சீருடையும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார் தொல். திருமாவளவன். இந்த மாநாடு சிறிது நேரம் ஆரம்பித்த உடனே ஒரு பகுதியில் இளைஞர்கள் பட்டாளம் அதிகளவு கூடிக்கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மேலும் அந்த இடத்தில் பெண்கள் சிக்கிக் கொண்டு பரிதவித்த நிலை ஏற்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்து சமூக ஒழுங்கை காக்க முயன்ற பெண் போலீசை விசிகவின் பெண் நிர்வாகிகளும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து அவரை இழுந்து தள்ளி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.



பெண்கள் கூடியிருக்கும் பகுதியில் அதிக அளவு இளைஞர்கள் கூடிய அராஜகத்துடன் கூச்சலிட்டதால் பெண்கள் அங்கே முகம் சுளித்துக்கொண்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாநாட்டில் விசிக நிர்வாகிகள்  செய்தியாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி சேர் வீச்சு உள்ளிட்ட பல்வேறு தவறான செயல்கள் நடைபெற்றது. இதனால் மாநாடு ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தாலும் ஒருபுறம் வன்முறை போல் காட்சியளித்தது.