S. Venkatesan About Hindi Sanskrit Language : அயல்நாடுகளில் பணிபுரிவதற்காகச் செல்லும் தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கான தேவை என்ன? ஆனால், வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை!
குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய வெளியுறவுத் துறை வரவேற்றுள்ளது. இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில், செப்டம்பர் 15ஆம் தேதி விளம்பரம் வெளியிட்டதோடு, மட்டுமின்றி இணைய தளத்திலும் பதிவேற்றியிருக்கிறது.
இதற்கு தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்கள் மற்றும், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இது அப்பட்டமான இந்திய/ சமஸ்கிருத மொழி திணிப்பு என்றும் சு.வெங்கடேசன் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கலாச்சார தொடர்புகளுக்கான கழகம் (Indian Council for Cultural Relations) 2024 செப்டம்பர் 13ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கை அப்பட்டமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதாக உள்ளது.
அது வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகங்களில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஆன தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிற அறிவிக்கை ஆகும்.
அதில் "விரும்பத்தக்க தகுதிகளாக" இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி சார்ந்த அறிவு குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இந்திய கலாச்சார தொடர்பு கழகம் "விரும்புகிறது" என்று தெரியவில்லை. இது அப்பட்டமான இந்தி சமஸ்கிருத திணிப்பே அன்றி வேறொன்றும் இல்லை.
இந்தியாவின் அலுவல் மொழி விதிகளில் இருந்தே விதி விலக்கைப் பெற்றுள்ள தனித்துவம் தமிழ்நாட்டிற்கு உண்டு. அது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தின் வெளிப்பாடு. மேற்கண்ட அறிவிக்கை அலுவல் மொழி விதிகளின் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் விரோதமானதாகும். தமிழ்நாட்டின் விண்ணப்பதாரர்கள் பெரும்பான்மையினருக்கு இந்தி/ சமஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத போது தெரிந்த அதை "விரும்பத்தக்க" தகுதியாக குறிப்பிடுவது அவர்களின் தேர்வுபெறும் வாய்ப்புகளை சீர் குலைப்பது ஆகும்.
ஆகவே இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக அந்த அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.