சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டம் அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் வானவில் மன்றம் மற்றும் அறிவியல் கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சொல்லப்பட்டிருந்ததை தான் நான் தெரிவித்து இருக்கிறேன். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்கின்ற முறையில் நான் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பொய் பேசினால் அது சரியாக இருக்காது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய தங்கள் அரசிடம் சொல்லி தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை அவர் பெற்றுத் தந்தது உண்டா எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கையை ஒத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் உள்ளிட்டவை தான் 'பி எம் ஸ்ரீ' ஸ்கூல் திட்டத்தின் அம்சமாகும்.
அதனை ஏற்க முடியாது என்று ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம், இருப்பினும் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் என கூறினார்.
மேலும் சமக்கிர சிக்ஷா திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை 'பி எம் ஸ்ரீ' ஸ்கூல் திட்டத்தில் சேராததை சுட்டிக்காட்டி நிறுத்துவது ஏற்படுடையது அல்ல என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ASER புள்ளி விவரங்கள் படி தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வித்துறை சார்ந்தவர்கள் மாணவர்களின் புள்ளி விவரங்களை எடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் தனியார் தொண்டு நிறுவனங்களை வைத்து புள்ளி விவரங்களை எடுத்துள்ளனர். ஆனால் அது விரிவான அடிப்படையில் இல்லை.
எனவே தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.