தமிழ்நாடு

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்
Man who stabbed Taylor to death with scissors in Nagercoil
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான செல்வம். இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தையலகம் நடத்தி வருகிறார்.

நேற்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கோவில் பத்து பகுதியை சேர்ந்த 38 வயதான சந்திரமணி என்பவர் பேன்ட் ஆல்டர் செய்து கொடுக்குமாறு செல்வம் நடத்தி வரும் தையலகத்திற்கு வந்துள்ளார்.சந்திரமணி, நாகர்கோவில் அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.

ஆடையை ஆல்டர் செய்து ஒரு மணி நேரத்தில் வாங்கி சென்று உள்ளார்,சந்திரமணி. இதனையடுத்து மீண்டும் 6:45 மணி அளவில் டெய்லர் கடைக்கு வருகை தந்து உள்ளார். அப்போது, ஆடையினை ஆல்டர் செய்தது சரியாக இல்லை என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த சந்திரமணி டெய்லர் கடையில் இருந்த கத்தரிக்கோலை கொண்டு கடையின் உரிமையாளரான செல்வத்தை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்பு கொலையாளி சந்திரமணி அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பாக வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர்.
கொலை செய்து தப்பியோடிய கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியது காவல்துறை.

சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலை செய்த 6 மணி நேரத்தில் விடுதியில் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்தனர் காவல்துறையினர். இச்சம்பவம் தொடர்பாக, சந்திரமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ’பேன்ட் ஆல்டர் செய்தது சரியாக இல்லை என்றும், இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்திரிக்கோல் கொண்டு கடையின் உரிமையாளரை குத்தி கொலை செய்ததாகவும்’ வாக்குமூலம் அளித்துள்ளார் சந்திரமணி.

பேன்ட் ஆல்டர் சரியாக இல்லை என டெய்லர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.