டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதில் மனுவில், அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல.
சோதனை நடத்துவதற்கான வாரண்டை காட்டி, வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றதாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமலாக்க துறை, சோதனைக்காக வாராண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு என கூறிய அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தியதாகவும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், டாஸ்மாக் அதிகாரிகளின் சுதந்திரத்தை மீறியதாக டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர முடியாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் வழக்கு தொடர முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆதாரங்களை சேகரிக்க மட்டுமே அதிகாரிகளின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாக சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத் துறை கோரியுள்ளது.