Turkey Yusuf Dikec Wins Silver in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்காக களத்தில் குதித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் வெற்றி பெறுவதற்காக தங்களின் முழு முயற்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அதாவது எகிப்து நாட்டைச் சேர்ந்த 26 வயதான நடா ஹஃபீஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்று உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், துருக்கி நாட்டை சேர்ந்த 51 வயதான வீரர் ஒருவர் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இந்த பெருமைக்கு சொந்தக்காரர் துருக்கி நாட்டை யூசுப் டிகேக் ஆவார். அதாவது பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் பங்கேற்ற துருக்கி ஜோடியான யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் ஜோடி வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினார்கள். இந்த போட்டியில் பங்கேற்ற யூசுப் டிகேக், துல்லியமாக பார்க்க உதவும் கண் கண்ணாடி, வெளிப்புற சத்தத்தை தடுக்கும் காதுகளுக்கு பொருத்தக்கூடிய கருவிகள் ஏதுமின்றி மிக சாதாரணமாக பங்கேற்று இலக்கை துல்லியமாக குறிபார்த்து சுட்டு வெள்ளி பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் போன்று பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி சர்வசாதாரணமாக களத்துக்கு வரும் யூசுப் டிகேக், இலக்கை துல்லியமாக கணித்து துப்பாக்கியால் சுட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. பொதுவாக துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கண் கூசாமல் இருப்பதற்காக துல்லியமாக பார்க்க உதவும் கண் கண்ணாடி, வெளிப்புற சத்தத்தை தடுக்கும் காது கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை அணிந்தே களம் இறங்குவார்கள்.
ஆனால் சாதாரண கண் கண்ணாடி அணிந்து யூசுப் டிகேக், சாதனை படைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யூசுப் டிகேக் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. யூசுப் டிகேக் துப்பாக்கியால் சுடும் வீடியோவை வைத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு வேடிக்கையான மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.