விளையாட்டு

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!
Shubman Gill Dominant 269 Puts India in Strong Position Against England
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்ற நிலையில், இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலின் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் 2 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள், ரிஷப் பந்த் 25 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்கள் என சொதப்பினர். ஒருக்கட்டத்தில் இந்திய அணி, 211 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், கேப்டன் கில்லும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் இந்திய அணி தங்களின் பொறுப்பான ஆட்டத்தினால் மீட்டெடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் எங்கே விட்டார்களோ? அதை அப்படியே இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்தார்கள். ஒருப்பக்கம் சுப்மன் கில் சதம், மறுப்புறம் ஜடேஜா 50 என தாண்ட இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

இந்தியாவின் அதிரடி ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 564 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது. மிகச்சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். சுப்மன் கில்- ஜடேஜா இணை 6 வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

இதன்பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் சுப்மன் கில்லுக்கு உதவ, மறுமுனையில் இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில். அவர் ஆடிய விதம் ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆட்டம் முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தவறான ஷாட்களை அவர் அடிக்கவே இல்லை. எப்படியும் 300 ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டனாக புதிய சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஷார்ட் ஆன் பந்துவீச்சில் ஈஸீயாக கேட்ச் கொடுத்து 269 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

பந்துவீச்சாளர்கள் தங்கள் பங்குக்கு மட்டையை சுழற்றினாலும், பெரிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 587 ரன்கள் குவித்தது. எட்ஜ்பாஸ்டனில் 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் ஆறாவது வெளிநாட்டு அணி இந்தியா ஆகும். இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்தில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

இங்கிலாந்து அணியினை பொறுத்தவரை ஷோயப் பாஷீர் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இன்றைய நாள் முடிய இன்னும் 20 ஓவர்கள் மிஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி தற்போது களமிறங்கியுள்ளது.