Imane Khelif vs Angela Karini Match Controversy in Paris Olympics 2024 : 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் களத்தில் விளையாடி வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் வெற்றி பெறுவதற்காக தங்களின் முழு முயற்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் முதன்முறையாக சர்ச்சை ஒன்று பெரிதாக வெடித்துள்ளது. அதாவது பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் 16வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினியும், அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃபும் மோதினார்கள். இருவரும் களத்தில் வெற்றி வேட்கையுடன் களமிறங்கிய நிலையில், தொடங்கிய 46 நொடிகளுக்குள் இந்த குத்துச்சண்டை போட்டி முடிந்துள்ளது.
அதாவது போட்டி தொடங்கிய 46 நொடிகளில் இமானே கெலிஃபுவின் அதிவேக தாக்குதலில் மூக்கு உடைந்து நிலைதடுமாறிய ஏஞ்சலா கரினி, கடுமையான வலி காரணமாக இதற்கு மேல் போட்டியில் பங்கேற்க முடியாது என்று நடுவரிடம் தெரிவித்து பாதியில் வெளியேறினார். மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், மேடையில் கண்ணீர்விட்டு அழுத ஏஞ்சலா கரினி, இமானே கெலிஃபுக்கு கை கொடுக்காமல் அங்கு இருந்து வெளியேறியது உலகளவில் அனுதாபங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏஞ்சலா கரினிவை அதிவேகத்தில் நிலைகுலையச் செய்த அல்ஜீரியாவின் இமானே கெலிஃபு ஆண் தன்மை கொண்ட பெண் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இமானே கெலிஃபு ஆண் தன்மை கொண்ட பெண் என்ற சந்தேகம் கடந்த 2023ம் ஆண்டே எழுந்ததால், அவர் பாலின தகுதி சோதனையை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்.
பின்பு நடத்தப்பட்ட பாலின தகுதி சோதனையில் இமானே கெலிஃப் தோல்வி அடைந்ததால் அவரை உலக சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இமானே கெலிஃப் எப்படி பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டார்? இமானே கெலிஃப் பாலின தகுதி சோதனையில் தோல்வி அடைந்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஏன் தெரியவில்லை? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏஞ்சலா கரினி முழுமையான பெண் தன்மை கொண்ட ஒரு பெண் வீராங்கனையுடன் மோதி இருந்தால் போட்டி அதிக நேரம் நீடித்து இருக்கும். ஏஞ்சலா கரினிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் ஒரு ஆண் தன்மை கொண்ட பெண்ணுடன் மோதவிட்டு ஏஞ்சலா கரினிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், நெட்டின்சன்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.