Cricketer Joe Root Beat Brian Lara Record : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியோடு, பிரபல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நாட்டிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 114 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றிபெற்றது. மேலும், இந்த டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் வாக் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் சாதனயை சமன் செய்துள்ளார். மூவரும் 32 சதங்களை எடுத்து இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் கிரைக் பிராத்வைட் 61 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களும், ஜோஸ்வா டா சில்வா 49 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஜாமி ஸ்மித் 95 ரன்களும், ஜோ ரூட் 87 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 62 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 54 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் மூலம், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா எடுத்திருந்த 11,953 ரன்களை அந்த நாட்டிற்கு எதிரான போட்டியிலேயே கடந்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (15,921), ரிக்கி பாண்டிங் (13,378), ஜாக் காலிஸ் (13,289), ராகுல் டிராவிட் (13,288), அலைஸ்டர் குக் (12,472), குமார சங்ககாரா (12,400) ஆகியோர் உள்ளனர். இதில், அலைஸ்டர் குக் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோரின் சாதனைகளை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் 7ஆவது இடத்தில் உள்ளார். இதுவரை ஜோ ரூட் 95 அரைசதங்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (119), ஜாக் காலிஸ் (103), ரிக்கி பாண்டிங் (103), ராகுல் டிராவிட் (99), சிவ்நரைன் சந்தர்பால் (96) ஆகியோர் உள்ளனர்.