ENG vs WI Test Match Highlights: 147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியோடு, பிரபல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாக் கிராவ்லே முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஆனாலும், அடுத்து களமிறங்கிய ஓலீ போப் உடன் இணைந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால், 4.2 ஓவர்களிலேயே [26 பந்துகள்] இங்கிலாந்து அணி 50 ரன்களை தொட்டது. 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, 1994ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற போட்டியில், இதே இங்கிலாந்து அணி 4.3 ஓவர்களில் [27 பந்துகள்] 50 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்த சாதனையை இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது.
அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அணிகள் விவரம்:
4.2 ஓவர்கள்- இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள், நாட்டிங்காம், 2024
4.3 ஓவர்கள்- இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, ஓவல், 1994
4.6 ஓவர்கள்- இங்கிலாந்து vs இலங்கை, மான்செஸ்டர், 2002
5.2 ஓவர்கள்- இலங்கை vs பாகிஸ்தான், கராச்சி, 2004
5.3 ஓவர்கள்- இந்தியா vs இங்கிலாந்து, சென்னை, 2008
5.3 ஓவர்கள்- இந்தியா vs மேற்கிந்திய தீவுகள், போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2023
அணியின் எண்ணிக்கை 105ஆக இருந்தபோது, பென் டக்கட் 71 ரன்கள் எடுத்து, ஷமர் ஜோசப் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து ஜோ ரூட் 14 ரன்களில் ஜேடன் சீல்ஸ் பந்துவீச்சில் அல்சாரி ஹோசப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.