சினிமா

இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த ‘புஷ்பா 2’.. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 32 நாட்களில் உலக அளவில் ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த ‘புஷ்பா 2’.. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘புஷ்பா 2’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும், ஃபகத் பாசில், சுனில், அஜய், ராவ் ரமேஷ், ஜெகதீஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 250 கோடி கொடுத்து பெற்றுள்ளதாகவும் ஜனவரி கடைசி வாரத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இப்படத்தின் வசூலை பொறுத்தே ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், கடந்த 32 நாட்களில் ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, ‘புஷ்பா 2’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ஆயிரத்து 831 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய சினிமாவில் அதிவேகமாக ஆயிரத்து 800 கோடிக்கு மேல் வசூலித்த படம் என்கிற சாதனையும் ‘புஷ்பா 2’ திரைப்படம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் ஆயிரத்து 790 கோடியை கடந்து ஆச்சரியப்படுத்திய நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் அதையும் விட அதிமாக வசூலித்துள்ளது. இதுவரை அதிகம் வசூலித்த இந்திய படங்களில் ‘தங்கல்’ இரண்டாயிரம் கோடிக்கு மேல் வசூலித்து முதல் இடத்திலும் ‘புஷ்பா 2’ இரண்டாவது இடத்திலும் ‘பாகுபலி 2’ மூன்றாவது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது. 

’புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட போது திரையரங்கிற்கு வந்த அல்லு அர்ஜுனை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இவரது எட்டு வயது மகன் தலையில் படுகாயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.