தமிழ் சினிமாவை மக்களின் மனதில் ‘குணச்சித்திர நடிகர்’ எனப் பெயர் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படி பிடித்தாலும், தொடர்ந்து தக்கவைப்பது என்பது அதைவிட கடினமான விஷயமாகும். அப்படி மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்தவர் தான், நடிகர் டெல்லி கணேஷ்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ் அவர்கள். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கம் திரைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரையுலகின் மூத்த கலைஞர் திரு.டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர்.
சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.