சினிமா

'இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்’..திடீரென பொங்கிய மோகன் ஜி.. என்ன விஷயம்?

’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

'இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்’..திடீரென பொங்கிய மோகன் ஜி.. என்ன விஷயம்?
Director Mohan G

சென்னை: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. திருமலையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். தினமும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய மூன்று முதல் 4 நாட்கள் கூட ஆகும். 

திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதிக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்றுள்ள நிலையில், இப்போது திருப்பதி லட்டுகள் நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. ஆம்.. திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் இதை ஜெகன்மோகன் ரெட்டி மறுத்திருந்தார்.

இதற்கிடையே நேற்று திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் பக்தர்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பிரபல இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘’எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்’’என்று தெரிவித்துள்ளார்.