சினிமா

செல்ல நாயை காப்பாற்ற தண்ணீரில் குதித்த பிரபல பாலிவுட் நடிகை!

தனது வளர்ப்பு செல்ல நாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தண்ணீரில் குதித்து காப்பாற்றியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கவிதா கௌசிக். இதுத்தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்ல நாயை காப்பாற்ற தண்ணீரில் குதித்த பிரபல பாலிவுட் நடிகை!
Bollywood Actress Kavita Kaushik Dives into Waterfall to Rescue Pet Dog Video Goes Viral
தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி பல்வேறு ஹிட் சீரியல்களில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் கவிதா கௌசிக். இந்தி மற்றும் பஞ்சாப் மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் கவிதா கௌசிக் தன் கணவர் ரோனிட் பிஸ்வாஸ் மற்றும் இவர்களது வளர்ப்பு செல்ல நாய் ராக்காவுடன் நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார்.

அப்போது, கவிதாவும் அவரது கணவரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, இவர்களது வளர்ப்பு நாய் ராக்கா, அப்பகுதியிலிருந்த மற்றொரு நாயை துரத்தி சென்றது. இரண்டு நாய்களும் நீரோடையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நடிகை கவிதா, நாயை பார்த்து கத்தி தண்ணீரை விட்டு வெளியே வா என்றார். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், நாய் மேலேறி கரைக்கு வர முடியாமல் திணறியது.

இதனால், நாயை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார் கவிதா. நாயை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்த நிலையில், இதுத்தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார், கவிதா. அதில், தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிவிட்டு மீட்பு வீடியோ குறித்து சில வரிகளை எழுதியுள்ளார்.



இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலர் கமெண்டில் மற்றொரு நாய்க்கு என்ன ஆனது? அந்த நாய் உயிர்பிழைத்ததா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர், மழையின் போது தனது செல்லப்பிராணியை ஏன் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றீர்கள்? என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

’குட்டும்ப்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு கால் பதித்த கவிதா, ’கஹானி கர் கர் ஹீ’, சிஐடி, ’எப்.ஐ.ஆர்’ போன்ற தொடர்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கினார். ஒருக்கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது என வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ’ஏக் ஹாசினா தி’, ’ஜான்சீர்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் கவிதாவின் நடிப்பில் ‘லவ்யாபா’ என்கிற இந்தி படம் வெளியாகியது. இப்படம் போதுமான வரவேற்பு பெறாத நிலையில் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.