சினிமா

நாம் இருவரும் சேரும் சமயம்.. கில்லர் லிஸ்டில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்கி நடிக்க உள்ள கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாம் இருவரும் சேரும் சமயம்.. கில்லர் லிஸ்டில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
A.R.Rahman Boards SJ Suryah Comeback Directorial Killer movie
இயக்குநர் பாதைக்கு திரும்பியுள்ள எஸ்.ஜே.சூர்யா, தனது கனவு திரைப்படமான ‘கில்லர்’ திரைப்படத்திற்காக மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் நடிகர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் நம்பியார், ரகுவரன் வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் இடம்பெறும். சமீபத்தில் இயக்குநர் அருண் இயக்கத்தில் வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த எஸ்.ஜே.சூர்யா அனைவரது பாராட்டையும் பெற்றார். இதைத்தொடர்ந்து, இவர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ , கார்த்தியின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களும் விரைவில் திரையில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் இயக்குநர் பாதைக்கு திரும்பியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

கில்லர் திரைப்படம்:

தனது கனவு படத்தை இயக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்துள்ள நிலையில், அப்படத்திற்கு ''கில்லர்'' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ”கில்லர்” படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. ‘கில்லர்’ படத்தின் பூஜை கடந்த ஜூன் 27 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, நடிகர் கார்த்தி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்:

வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக 2015ம் ஆண்டு 'இசை' என்கிற படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவரே படத்தை இயக்கி நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கில்லர் திரைப்படத்திற்காக மீண்டும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைக்கோர்க்க உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் பெருமை ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.