பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி கரீனா கபூர் மற்றும் குழந்தைகளுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த மர்ம நபர் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 21-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீஸாரிடம் அவர் கூறியதாவது, நானும் என் மனைவி கரீனா கபூரும் எங்களது அறையில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது என் மகன் ஜெஹ் எனப்படும் ஜஹாங்கீர் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த நாங்கள் என் மகன் அறைக்கு சென்று பார்த்த போது என் மகனின் உதவிக்காக இருந்த எலியாமா பிலிப், அந்த மர்ம நபரை பார்த்து பயத்தில் கத்திக் கொண்டிருந்தார். அந்நபரை பிடிக்க முயன்ற போது அவர் கத்தியால் தன்னை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்தார்.
சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்த மர்ம நபர் அவரது கழுத்து, கை மற்றும் முதுகில் பலமுறை கத்தியால் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மர்ம நபர் எலியாமா பிலிப்பிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு அந்நபரை தானேவில் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பதும் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடந்த சைஃப் அலிகானின் பாந்த்ரா வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் ஷரிபுலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவது போலீஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தான் தாக்குதல் நடத்தியதை ஷரிபுல் இஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.