ஆன்மிகம்

ஆடி அமாவாசை படையல்: தவிர்க்கவேண்டிய காய்கள் என்ன?

ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது ஆடி, புரட்டாசி, தை அமாவாசை தான்.

ஆடி அமாவாசை படையல்: தவிர்க்கவேண்டிய காய்கள் என்ன?
ஆடி அமாவாசைக்கு படைக்க வேண்டிய உணவு பொருட்கள்
ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது ஆடி, புரட்டாசி, தை அமாவாசை தான்.

ஆடி அமாவாசை

வருகிற ஆடி அமாவாசையன்று (ஜூலை 24 ஆம் தேதி) முன்னோர்களுக்கு படையல் வைப்பது வழக்கம். அன்றையத் தினத்தில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை இப்பகுதியில் காண்போம்.

நமக்கு ஏற்பட்டுள்ள 'பித்ரு தோஷத்தை' போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் 'ஆடி அமாவாசை'. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் பேறு உள்பட நம்முடைய வீட்டில் தாமதப்படும் சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும், முன்னோரின் ஆசி பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

தவிர்க்க வேண்டிய காய்கள்

பித்ருலோகத்தில் மூலிகையாகப் புடலங்காய் இருப்பதாக நீதி நூல்கள் கூறுகின்றன. அதன் நிழலில்தான் நம் முன்னோர் இளைப்பாறுகிறார்களாம். எனவே, 'ஆடி அமாவாசை'யன்று புடலங்காய், வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றைப் படையலில் சேர்ப்பதால், வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க அவர்கள் ஆசி தருவார்களாம். அதேபோல், பசுந்தயிரும் அவர்களுக்கு மிகவும் பிடித்த விருப்பமான உணவுப் பொருள் என்பதால், அதையும் சேர்ப்பது நல்லது.

பொதுவாகவே, இச்சையைத் தூண்டும் காய்கறிகளான, வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை அன்றைய தினம் தவிர்க்கவேண்டும். பின்னர், காகத்திற்கு அந்தப் படையலை வைத்து, காகம் உணவெடுத்த பிறகே நாம் உண்ணவேண்டும்.

காரணம், நம் முன்னோர்தான் காகம் வடிவில் பூமிக்கு வருகின்றனர் என்பது ஐதிகம். அதுமட்டுமல்ல; காகமானது எமனின் தூதுவன் என்றும். எமலோகத்தின் வாயிலில் காகம் காவல் காக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. காகத்துக்குச் சாதம் வைத்து, உணவை அது கொத்தி விழுங்கியது என்றால், எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதியடைந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

வழிபாடு செய்யும் முறை

மூதாதையர்கள் மறுபடியும் பிதுர்லோகம் திரும்ப விருப்பதால், அவர்களின் பயணம் சீராக அமைய, அரிசி, பாசிப்பருப்பு, நெய், வாழைக்காய், குடை, காலணி ஆகியவற்றை முன்னோரின் பிரதிநிதியாகப் பங்குபெறும் அந்தணர்களுக்கு அளிக்க வேண்டும்.

காசி, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், கயா, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பவானி கூடுதுறை, கொடுமுடி, பேரூர், திருவையாறு. ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு 'திலதைப்பதி எனும் திலதர்ப்பணபுரி ஆகியவை ஆடி அமாவாசை'யன்று முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் சிறந்த தலங்களாகும்.

'ஆடி அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது. பித்ரு பூஜை செய்து முடிக்கும் வரை, வீட்டில் அன்றாடம் மேற்கொள்ளும் பூஜைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

(கட்டுரையாளர்: மீனாட்சி கண்ணன்/ குமுதம் சிநேகிதி / 24.07.2025)