அ. தி.மு.க போலவே அமைதியாக இருக்கிறது பா.ஜ.க. அடுத்த பாய்ச்சலுக்கான பதுங்கலா, இல்லை தேர்தல் தோல்வி கொடுத்த அமைதியா என்பது தெரியவில்லை. அண்ணாமலை விலகல் கட்சியை பலவீனப்படுத்திவிட்டதாகவும், பா.ஜ.க.வை வலுப்படுத்த தலைமை தடுமாறிவருவதாகவும் கமலாலயத்தில் ஒருசாராரின் புலம்பல் சத்தம் கேட்க...
பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளரான கராத்தே தியாகராஜனை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். தமிழகத்தில் சொல்லப்பட்ட பா.ஜ.க., இன்று ஒரே ஒரு எம்.எல்.ஏ.வுடன் சுருங்கிவிட்டதே? வலுப்பெற்றுவிட்டதாக "இந்தத் தேர்தலை மட்டும் வைத்து பா.ஜ.கவின் எதிர்காலத்தையோ, அதன் வலிமையையோ கணக்குப்போட முடியாது. கூட்டணி பலம், நாம் எதிர்பார்த்த தொகுதி கிடைத்ததா, வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதி கொடுக்கப்பட்டதா? என நிறைய ஃபேக்டர்ஸ் பார்க்கவேண்டி இருக்கிறது. ஆனால், ஓட்டு சதவிகிதம் எங்களுக்கு குறையவில்லை."
இந்தத் தேர்தல் முடிவிலிருந்து பா.ஜ.க.வும், தி.மு.க.வும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
"தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தல்போல பா.ஜ.க தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைக்கவில்லை. அதிமுக தலைமையில்தான் தேர்தலை எதிர்கொண்டோம். அப்படி நிற்கும்போது நிறைய ப்ளஸ், மைனஸ் இருக்கும். கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வது எப்படி என்று டெல்லியிலிருந்து எங்களுக்கு வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, கட்சி வளர்ச்சி குறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசித்து முடிவு செய்வார்."
'திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழ்நாடு' என்பது பா.ஜ.க.வின் ஆசை. இப்போது விஜய் வென்றது பா.ஜ.க.வுக்கு வெற்றிதானே?
"தமிழகத்தில் தி.மு.க.வை அகற்றிவிட்டு பா.ஜ.க. தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. இப்போது த.வெ.க. வந்திருக்கிறது. தி.மு.க.வை எதிர்த்ததுபோலவே, இந்த அரசில் உள்ள குறைகள், மக்கள் பிரச்னைகள் குறித்து தினமும் அறிக்கை வெளியிட்டு, தேவையான ஆர்ப்பாட்டங்களை செய்துவருகிறோம். 2031ல் எங்கள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளை தொடங்கிவிட்டோம்."
'அ.தி.மு.க.வை பா.ஜ.க. தான் அழிக்கிறது' என விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், த.வெ.க. தானே அ.தி.மு.க.வினரை இணைத்து வருகிறது. அப்படியானால், அ.தி.மு.க.வை அழிப்பது விஜய் தானே... அதையேன் நீங்கள் யாரும் பேசுவதில்லை?
"ஒரு கட்சியை அழித்துத்தான் பா.ஜ.க. தமிழகத்தில் வளரவேண்டும் என அவசியம் கிடையாது. சித்தாந்த அடிப்படையில் வலுவான அடித்தளம்கொண்ட கட்சி எங்களுடையது. தி.மு.க.வோ, மற்ற கட்சிகளோ பா.ஜ.க. மீது இப்படி குறை சொல்லிவந்தார்கள்... அவ்வளவுதான்."
தமிழகத்தில் கூட்டணி மந்திரிசபை ஆரோக்கியமானதா, இது எவ்வளவு நாள் நீடிக்கும்?
"கூட்டணி மந்திரிசபை நல்லதுதான். அப்போதுதான் கூட்டணிக் கட்சியினருடன் ஒரு ஆரோக்கியப் போக்கு இருக்கும். தமிழகத்தில் இது தொடர்ந்தால் நல்லதுதான்."
'அ.தி.மு.க -தி.மு.க இணைந்து ஆட்சி', 'திருமாவை முதல்வர் ஆக்கும் முயற்சி நடந்தது உண்மைதான்' என்பதை கூட்டணிக் கட்சிகளில் இருந்தவர்களே ஒப்புக்கொண்டார்கள். இதை ஏன் பா.ஜ.க. எதிர்க்கவில்லை?
"பத்திரிகை, சோஷியல் மீடியாக்களில் வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை வைத்து எந்தவிதமான கருத்தும் சொல்ல முடியாது. இருந்தாலும், இப்படி பேச்சு எழுந்தபோது அண்ணன் நயினார் நாகேந்திரன் பதில் சொல்லிவிட்டார். ஐ.யு.எம்.எல் காதர்மொகிதீன் சொல்கிறார் என்றால், அவர் கூட்டணியில் இருக்கும்போதே சொல்லியிருக்க வேண்டும் இல்லையா... நினைத்த நேரத்துக்கு ஒன்று பேசக்கூடாது. மலேசியாவில் அவருடன் என்ன டீலிங் நடந்தது? அவர் எப்படி தவெகவுக்கு வந்தார்? அதையெல்லாம் வெளியே சொன்னால் பிரச்னையாகிவிடும்."
அண்ணாமலை வெளியேறியது பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக நினைக்கிறீர்களா?
"அண்ணாமலை சென்றது பா.ஜ.க.வுக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் போயிருக்கலாம். ஆன்லைனில்தான் அங்கு உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். அதனால் பெரிய பாதிப்பில்லை."
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திடீரென வாபஸ் பெற்றிருக்கிறார் டி.ஆர்.பாலு. அப்படியானால் அண்ணாமலை பின்னால் தி.மு.க. இருக்கிறதா?
"தெரியவில்லை. அதை அண்ணாமலை தான் சொல்லவேண்டும். ஏற்கெனவே 'முன்னாள் அமைச்சர் சக்கரபாணியுடன் நெருக்கமாக இருந்தார். அவருடைய மச்சான்' என சொல்கிறார்கள். தி.மு.க தரப்பில் யாராவது பேசினார்களா என தெரியவில்லை. டி.ஆர்.பாலு வீராதி வீரன். சூராதி சூரன். அவர் எதையும் சந்திக்க தயார் என்றுதான் சொல்வார். அவர் ஏன் வழக்கை திரும்பப் பெற வேண்டும்? இதை பாலுவும், அண்ணாமலையும்தான் சொல்ல வேண்டும்"
நயினார் நாகேந்திரன், விஜய்க்கு ஈடுகொடுப்பாரா... மாநில பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்களா?
"நாங்கள் தேசியக் கட்சி. அதில் மாநிலத்தலைவராக இருக்கும்போது ஒரு லிமிட்டேஷன் இருக்கிறது. சில விஷயங்களில் மட்டும் மாநில உரிமைகளுக்கு தகுந்த மாதிரி அவர் சில முடிவெடுத்துக்கொள்ள அதிகாரம் கொடுப்பார்கள். தேசிய தலைமையின் வழிகாட்டுதல்படிதான் அவர் செயல்படுகிறார். அவர் நன்றாக செயல்படுகிறார். அவரை மாற்றவேண்டிய அவசியமில்லை."
ஆனால், உங்களைப் போன்ற தேசியக் கட்சியான காங்கிரஸில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மாநிலத் தலைமையில் மாற்றம் வந்திருக்கிறதே?
"செல்வப்பெருந்தகை மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளிட்ட ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. எனவே, ராகுல் காந்தி ஏற்கெனவே அவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டார். அதன் அடிப்படையில்தான் அவர் மாற்றப்பட்டார். இப்போது தி.மு.க.வில் சேர செல்வப்பெருந்தகை பிளான் போட்டிருக்கிறார். அவரை சேர்க்கக்கூடாதென தி.மு.க.வில் முக்கிய தலைவர்கள் சொல்கிறார்கள். அங்கும் அவருக்கான கதவு அடைக்கப்பட்டுவிட்டது."
போதை குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் சரத்குமாரை ஒருதரப்பு தி.மு.க. கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தாலும், மற்றொரு தரப்பு தி.மு.சு.வினர் அவரை காக்க முயல்வதாக சொல்கிறார்களே?
"சைதாப்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க. பகுதிச் செயலாளர் துரைராஜ் என்பவர் மா.சுப்பிரமணியத்துக்கு வலதுகரமாக இருப்பவர். தவிர, மாநகராட்சியின் 13வது மண்டல சேர்மனும்கூட இந்த துரைராஜுக்கு நெருங்கிய உறவினர்தான் அமைச்சர் சரத்குமார். தி.மு.க அபிமானி. இப்போது த.வெ.கவில் சீட் வாங்கி அமைச்சர் ஆகியிருக்கிறார். திமுகவினரும் இவரது வெற்றிக்கு வேலை செய்திருக்கிறார்கள். எனவே ஒரு பெரிய குரூப் அமைச்சரைக் காப்பாற்றுகிறது."
அண்ணாமலைபோல ஆளுங்கட்சிமீது இப்போது மாநில பா.ஜ.க. விமர்சனங்களை முன்வைப்பதில்லை. விஜய்யும் பா.ஜ.க எதிர்ப்பை காட்டுவதில்லை. த.வெ.க பா.ஜ.க ராசியாகிவிட்டதா?
"அப்படி சொல்லமுடியாது. இப்போதெல்லாம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 'வாட் ப்ரோ?' என்றுதான் விஜய்யை கடுமையாக விமர்சிக்கிறார். அமித் ஷா வழிகாட்டுதல்படி சரியாக செயல்படுகிறார். ஆனால், ஏன் தவெக, பா.ஜ.க. எதிர்ப்பை கைவிட்டுவிட்டது என்று அக்கட்சிதான் சொல்ல வேண்டும். காங்கிரஸுடன் த.வெ.க. இருப்பதால் எங்களின் நேர் எதிரி தவெக தான். இந்தியாவில் பா.ஜ.க.வை பகைத்துக்கொண்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. அந்தளவுக்கு வலுவானக் கட்சி பா.ஜ.க. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்ததாக பா.ஜ.க. தான் டிசைடிங் ஃபேக்டராக இருக்கும். நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்."
ரஜினியின் நண்பர் நீங்கள். 'அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு தருவார்' என பேசப்பட்ட நிலையில், அதிலிருந்து ரஜினி பின்வாங்கிட்டாரே. இதன் பின்னணி என்ன?
"அண்ணாமலை ரஜினியைப் பார்த்திருக்கலாம். ஆனால், ரஜினி என்றுமே அவரை ஆதரிக்கமாட்டார். ரஜினி, பிரதமர் மோடியின் அபிமானம் பெற்றவர். அதனால்தான் அவர் தெளிவான ஸ்டேட்மென்ட்டைக் கொடுத்துவிட்டார். நாங்கள் சென்று பார்த்தபோதுகூட, எங்கள் தலைவர் நாகேந்திரனிடம், 'அண்ணாமலைக்கு ஆதரவில்லை' என தெளிவாக சொல்லிவிட்டார்."
ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், விஜய் பிடித்த உயரத்தை அவர் பிடித்திருப்பாரா?
"கட்டாயமாக முதலமைச்சர் ஆகியிருப்பார். அவரை நிறைய பேர் கன்ஃபியூஸ் செய்துவிட்டார்கள். நானும் அவரிடம் சொன்னதுண்டு... குறிப்பாக, 'தோற்றவர்களிடம் ஐடியா கேட்காதீர்கள்' என்றேன். அதுவும், 'ஆந்திராவில் சிரஞ்சீவியிடம் கேட்காதீர்கள்' என்றேன். கலைஞர், ஜெயலலிதா இருந்தபோதே அவர் வந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் தமிழக மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பார்கள்."
ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றதை எப்படி பார்க்கிறீர்கள்?
"அவர் தோற்கப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருக்குத்தான் தெரியவில்லை. உளவுத்துறையை அவர்தான் கையில் வைத்திருந்தார். அந்த துறையின் தோல்வி அது! பொதுமக்கள் எம்.எல்.ஏ. ஆபிஸுக்கு போனால் எந்த வேலையும் நடக்காது. அதேபோல, ஸ்டாலினை தொகுதி மக்கள் பார்க்கவும் அனுமதி கிடையாது. முக்கியமாக, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கபிலன் என்பவர், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தவறாகப் பேசியதை, 3 நாள் கழித்துதான் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறது உளவுத்துறை. இப்படி எல்லாமுமே சொதப்பிதான் ஸ்டாலின் தோற்றார்: