Ponniyin Selvan Won Awards in 70th National Film Awards 2022 : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், தமிழ் இலக்கிய வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட, வாசித்துவரும் நாவலாக இன்றளவும் உள்ளது. ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த நாவலானது, இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பதற்காக, எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்ட எண்ணற்ற திரைத்துறை பிரபலங்கள் முயற்சித்து பார்த்தனர். 1958-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார். எஸ்.எம்.சுப்பையா இசையமைப்பதாகவும் இருந்தது. அதற்கான போஸ்டரும் கூட வெளியிடப்பட்டது. இதற்கிடையில், எம்.ஜி.ஆர். விபத்தில் சிக்கிக்கொள்ள திரைப்படம் கைவிடப்பட்டது.
1999-ம் ஆண்டு, மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழு, பொன்னியின் செல்வன் கதையை நான்கு மணிநேர நாடகமாக உருவாக்கி நிகழ்த்தி காட்டியது. இந்த நாடகத்தில் நடிகர் நாசர், நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், அவ்வளவு சீக்கிரம் எவரின் கைகளிலும் சிக்காமல் தப்பித்து வந்தது. இறுதியாக இயக்குநர் மணிரத்தினத்தின் கைக்கு தான் வாய்த்தது.
2010ஆம் ஆண்டே மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மகேஷ்பாபு அருண்மொழி தேவனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இறுதியாக, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணியை கவனிக்க, தமிழின் மூத்த எழுத்தாளரான ஜெயமோகன் வசனம் எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. திரைப்படத்தின் முதல் பாகம் பெருத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வசூல் ரீதியாகவும் நல்ல சிறந்து விளங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு, இரண்டாம் பாகமும் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 70ஆவது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பொன்னியின் செல்வன் பாகம் -1 நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதில், தமிழின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை, பெற்றது. அதேடு, சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதினை, ஏ.ஆர்.ரஹ்மானும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை ரவிவர்மனும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதினை, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் பெற்றுள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது 7ஆவது தேசிய விருதாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. 1993ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்திற்கு முதல் தேசிய விருதினைப் பெற்றார். தொடர்ந்து 1996 மின்சார கனவு திரைப்படத்திற்கும், 2001 லகான் திரைப்படத்திற்கும், 2002 கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கும், 2017 காற்று வெளியிடை திரைப்படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்றார். அதே ஆண்டு வெளியான மாம் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.