இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Oct 15, 2024 - 01:47
Oct 15, 2024 - 01:56
 0
இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

வீடு, நிலங்களை விற்று வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும், தாங்கள் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டுத் தரக்கோரியும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தம்பதியினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நிலம் விற்பனை புரோக்கராக இருந்து வருகிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. இவரது நெருங்கிய நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம் இருவரும் தனக்கு தெரிந்த நண்பர்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கின்ற பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திகேயன் என்பவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், தனக்கு தெரிந்த ஃபைணான்சியர் இருப்பதாகவும், அவர் வாயிலாக வாங்கலாம் எனக்கூறி, கார்த்திகேயனிடம் இருந்த நிலம் மற்றும் வீடு அடமானம் வைத்து ரூபாய் 89 லட்சத்தை பெற்றுள்ளார்.

இதனை தென்காசி மாவட்டம் மேலகரம் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த அசோக் மற்றும் அவரது மனைவியின் சகோதரர்களிடம் தென்காசி பகுதியில் வைத்து கொடுத்தாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பெற்றவுடன், மோசடி கும்பல் திட்டமிட்டபடி காவல்துறையினர் வருவதாக நாடகமாடி கார்த்திகேயனை அப்பகுதியில் இருந்து விரட்டி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்ட போது பணம் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்ததன் அடிப்படையில் சதீஷ், அசோக் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களிடம் பெற்ற தொகை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு சொந்தமாக நிலம் மற்றும் வீடுகளை வாங்கியுள்ளதாகவும், தாங்கள் தற்போது பணத்தை முழுவதுமாக இழந்து தவித்து வருகின்றோம் என்று புகார் அளித்தவர்கள் கூறினர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது தங்களது பெண் குழந்தைகளை கல்லூரி வகுப்பில் சேர்ப்பதற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றோம் என்றும் இந்த பணம் இல்லையேல் தனக்கு வாழ்வாதாரம் இல்லை. எனவே நாங்கள் கொடுத்த பணத்தை எப்படியாவது மீட்டு தர வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow