தொழில்நுட்பம்

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி தொழில்நுட்ப உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வந்தாலும், அதே நேரத்தில் டெக் நிறுவனங்களின் செலவினங்களையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏஐ உள்கட்டமைப்பு, தரவுமையங்கள் மற்றும் புதிய சேவைகளுக்காக பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள், அதற்கான செலவுகளை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது மொத்த பணியாளர்களில் சுமார் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாப்ட், கடந்த சில மாதங்களாகவே நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில பிரிவுகளில் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு (Voluntary Exit) பெறும் வாய்ப்பையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் இரண்டு கட்டங்களாக பெருமளவில் பணிநீக்கம் செய்தது. முதல் கட்டத்தில் சுமார் 6,000 பேரும், இரண்டாவது கட்டத்தில் 9,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 4 சதவீதம் பேர் வேலை இழந்தனர்.

அதேபோல், இந்த ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களை குறைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 2.5 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.