தமிழ்நாடு

RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !

ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !
RATHAVETTAI EPISODE 11 : Seizing Raja Crime Trail !

ஆக்சுவலா நம் குமுதம் ரிப்போர்ட்டரில் 11வது எபிஸோடை எட்டியிருக்கும் 'ரத்த வேட்டை' தொடர் தமிழக காவல் துறை வட்டாரத்தில் செம்ம ஹிட். இதனால் எடுத்த எடுப்பிலேயே எக்கச்சக்கமாக டேக் ஆஃப் ஆகியிருக்கும் இந்த தொடரில் ‘அந்த மண்ட வெட்டியை எழுதுங்க, இந்த குடல் உருவியை எழுதுங்க' என்று வாலன்டியராக தாங்களே போன் போட்டு கிரிமினல்ஸை போட்டுக் கொடுத்துக்கொண்டுள்ளனர். அந்த வகையில் நம் கையில் பதறப் பதற இன்னும் பத்து எபிஸோட்ஸுக்கான டெரர் கேரக்டர்கள் இருக்கின்றன. இந்தநிலையில்தான், இப்போதைக்கு நம் லிஸ்ட்டிலேயே இல்லாத சீசிங் ராஜாவை நுழைத்துள்ளது லேட்டஸ்ட் என்கவுன்டர். கடந்த செப்டம்பர் 23ம் தேதி அதிகாலையில் சென்னை அக்கரை பகுதியில் நடந்த சம்பவத்தில்தான் ராஜாவின் கதையை முடித்துள்ளது காவல்துறை!

யார் இந்த சீசிங் ராஜா? என்கவுன்டர்ல போடுற அளவுக்கு என்ன பண்ணுனாரு? என்று காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ஃபைலை புரட்டிக் கொண்டே பேசத் துவங்கியவர்... "இவனோட அப்பா, அம்மா ஆந்திராதான். ஆனா, பிழைப்புக்காக சென்னையில வந்து செட்டிலாகியிருக்காங்க. கிழக்கு தாம்பரம் பகுதிலதான் வளர்ந்தான் ராஜா. 9ம் வகுப்பு வரைக்கும் படிச்சவனுக்கு வளர்ப்பும், சேர்க்கையும் சரியில்லை. சின்ன வயசுலயே பிக்பாக்கெட், அடிதடின்னு இறங்கிட்டான்.

அப்படியே வளர்ந்து கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்னு பண்றப்ப போலீஸ் கேஸுல சிக்கிடுவான். அவங்க கூப்பிட்டு விசாரிக்கிறப்ப 'சார் நான் கராத்தே மாஸ்டர். என்னைப் போய் கிரிமினல் மாதிரி ட்ரீட் பண்றீங்க?'ன்னு எகிறுவான். போலீஸ் நம்புறதுக்காகவே ஏரியா பசங்களை வெச்சு கராத்தே கிளாஸ் மாதிரி சீன் போட்டிருக்கான். காலையில கராத்தே மாஸ்டர்னா மாலைக்கு மேலே அக்மார்க் கிரிமினலா திரிஞ் சிருக்கான்.

கடன் கட்டாத வண்டிகளை சீஸ் பண்ணிட்டு வர்ற வேலை இவனுக்கு கிடைச்சிருக்கு. கருணையே பார்க்காம வண்டியை அள்ளிட்டு வந்து ஆபீஸ்ல போட்டுடுவான். இந்த வேலையை பார்த்தபடியே ராஜா ஏகப்பட்ட இல்லீகல் விஷயங்களையும் பண்ணிட்டிருந்திருக்கான். அந்த விவகாரங்கள்ல இவன் மேலே வழக்கு ஃபைல் ஆகுறப்ப, தன் பேரோடு தன் தொழிலான சீசிங்கை அடைமொழியா சேர்த்து 'சீசிங் ராஜான்னு எஸ்டாபிளிஸ் ஆயிட்டான்.

தாம்பரம் ஏரியாவில் ரவுடித்தனம் பண்ணிட்டிருந்த புள்ளிகளுடன் நெருக்கத்தை உருவாக்கிட்டு, மார்க்கெட் ஏரியாவில் வசூல் பண்றது, கட்டப்பஞ்சாயத்துன்னு கிரிமினலா வளரத் துவங்கினான். சீசிங் வேலையில கில்லியா இருந்ததாலே இவனோட அதட்டல், மிரட்டல் பாடி லாங்க்வேஜ் பல தாதாக்களுக்கு பிடிச்சுப் போச்சு. 'வெறுமனே வாய் சவடால் பத்தாது. பொருளை எடுத்து போடக் கத்துக்கோ'ன்னு வட சென்னை ரவுடி ஒருத்தன் தான் இவனுக்கு ஆயுத புழக்கத்தை கத்துக் கொடுத்திருக்கான்.

கத்தியை எடுத்து சொருகுறது எப்படி, வாளை எடுத்து வீசி வெட்டுறது எப்படி?ன்னு கூவக்கரையில பிராக்டீஸ் பண்ணுவானாம். துவக்கத்துல ஆடு, மாடுகளை வெட்டி பயிற்சி எடுத்ததா சில கேஸ்ல அரெஸ்ட் ஆனப்ப வாக்குமூலம் கொடுத்திருக்கான். தென்சென்னை, வடசென்னை ரெண்டு தரப்பு ரவுடிகளின் டீமிலும் கூலியாளா போயிருக்கான். சில கொலைகளிலும் இவனோட கை சின்ன அளவில் இருந்திருக்குது. கொலைத் தொழிலை படிச்ச பிறகு வெளிப்படையா இறங்கி வெட்டத் துவங்கியிருக்கான். அந்த சமயத்துல எந்த வழக்கு தன் மீது பாய்ஞ்சாலும் கவலை இல்லைங்கிற அகம்பாவ புத்தி அவன் தலையில ஏறிடுச்சு.

இந்த நேரத்துலதான் ரவுடி ஆற்காடு சுரேஷின் நட்பு இவனுக்கு கிடைக்க, ரெண்டு பேரும் நெருக்கமாயிட்டானுங்க. சுரேஷுக்காக நிறைய சம்பவங்களை பண்ணியிருக்கான். 2007, 2008, 2009 வருடங்களில் கூடுவாஞ்சேரி, ராஜமங்கலம் காவல் நிலையம் உட்பட சென்னையின் கணிசமான ஸ்டேஷன்களில் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆட்கடத்தல், கட்டப்பஞ் சாயத்துன்னு வழக்குகள் பதிவாச்சு. சுரேஷும், ராஜாவும் சேர்ந்து பண்ணிய சம்பவங்களில் ரொம்ப குரூரமானது பூந்தமல்லி நீதிமன்ற பகுதியில் பண்ணிய ரெட்டைக் கொலைதான்.

ஆந்திரா வரைக்கும் பிரபலமான ரவுடி சென்னகேசவலு என்கிற சின்னாவை 2010ல் இவனுங்க டீம் போட்டுத் தள்ளுச்சு. பட்டப்பகலில், நீதிமன்ற பகுதியில் பத்து பேருடன் தைரியமா இறங்கி சம்பவத்தை பண்ணினானுங்க. இதுல பாவம் எந்த சம்பந்தமுமில்லாத அந்த ஜூனியர் வக்கீல் பகத்சிங்கை தலையில வெட்டித் தள்ளி கொன்னானுங்க. அப்புறம், காருக்குள்ளே உட்காந்திருந்த சின்னாவை கார் கண்ணாடியை உடைச்சு, உள்ளேயே வாளை விட்டு வீசினானுங்க, காயம்பட்டு வெளியே விழுந்த சின்னாவை சிதைச்சுட்டு போனானுங்க. 'ஏண்டா என்னைய வெட்டுற?'ன்னு திரும்பத் திரும்ப கேட்ட சின்னாவின் கடைசி கேள்விக்கு பதிலே சொல்லலை சீசிங் ராஜா.

இந்த கேஸ் மூலமா தமிழகம் முழுக்க மட்டுமில்ல ஆந்திராவிலும் பிரபலமானான் சீசிங். இந்த கேஸ்ல வெளியில் வந்த பிறகு ஆட்கடத்தல் வழக்குல சிக்கினான். அதுக்குப் பிறகு சுரேஷும், ராஜாவும் இணைஞ்சு பண்ணுன சம்பவம், வடசென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளரான தென்னரசுவை போட்டுத் தள்ளியதுதான். வெங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தென்னரசு மீது நாட்டு வெடிகுண்டை வீசி, குரூரமா கொன்னானுங்க. இதன் மூலமா ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா ரெண்டு பேரும் சென்னை சுத்துவட்டார மாவட்ட போலீஸுக்கு மிகப்பெரிய தலைவலியா மாறினானுங்க.

அடுத்து 2018ல் ஆந்திராவில் அசோக்குமார், கோபிநாத்னு ரெண்டு பேரை சீசிங் ராஜா டீம் போட்டுத் தள்ளுச்சு. ராஜாவின் ரெட்டைக் கொலைகளில் ஆந்திராவை அடிப்படையா கொண்டவங்க இருக்குறது ஏன்னு விசாரிச்சுது போலீஸ். தமிழக எல்லையோர ஆந்திர மாநில தாதாக்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், சில அரசியல்வாதிகள் தங்களோட பகையை தீர்த்துக்க தமிழகத்தைச் சேர்ந்த சீசிங் ராஜாவை கூலிக்கு எடுக்கத் துடிக்கும் தகவல் கிடைச்சுது. இரட்டைக் கொலை எக்ஸ்பர்ட்ன்னும் எஸ்டாபிளிஸ் ஆனான் சீசிங் ராஜா. அதிலும் நாட்டு வெடிகுண்டை வீசி வீழ்த்தி அப்புறம் அந்த புகை மண்டலத்துக்குள் நுழைஞ்சு வெட்டித் தள்ளுறதுதான் ராஜாவின் பிரத்யேக கொலை ஸ்டைலே.

பதறப் பதற கொலை பண்ணுற சீசிங் ராஜா, லேடீஸ் விஷயத்துல படு வீக். அவனுக்கு ஐந்து மனைவிகள்னு சொல்வாங்க. ஆக்சுவலா எங்களுக்கு தெரிஞ்சு ஜானகி, ஜான்சி, வினித்ரான்னு மூணு மனைவிகள்தான். கல்யாண வயசுல வளர்ந்த மகள் இருக்கும் நிலையில் கடைசி மனைவி மூலமா கைக்குழந்தையும் இருக்குது. அந்தக் கடைசி மனைவிதான், 'சீசிங் ராஜாவின் உயிருக்கு ஆபத்துன்னு விடியோவுல கண்ணீர் மல்கப் பேசியிருந்தாங்க" என்றவர் தொடர்ந்து பேசினார்...

"ஆற்காடு சுரேஷ் சாவுக்குப் பிறகு சீசிங் ராஜா அடங்குவான்னு எதிர்பார்த்தோம். ஆனா அவன் பதுங்குனானே தவிர அடங்கல. இங்கே கிரிமினல்தனம் பண்ணிட்டு ஆந்திராவுக்குப் போய் மறைஞ்சுக்குவான். கொலை, கட்டப்பஞ் சாயத்து மூலமா சேர்த்த சொத்துகளை வெச்சு ஆந்திராவுல சொகுசாதான் வாழ்ந்திருக்கான் சீசிங் ராஜா. இந்த நிலையில்தான் சமீபத்துல அவனை ஆந்திராவின் கடப்பா அடுத்த ராஜம்பேட் பகுதியில் கைது பண்ணுச்சு அடையாறு எல் அண்ட் ஓ இன்ஸ்பெக்டர் இளங்கனி தலைமையிலான ஸ்பெஷல் டீம். சீசிங் ராஜா கைதானது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்னு பொதுவா பேசப்படுது. அது உண்மையில்லை. சீசிங் ராஜா சமீபத்தில் கைதானது வேறு ஒரு வழக்கில். சில மாசங்களுக்கு முன்பு வேளச்சேரியில் ஆயுதத்தைக் காட்டி ஒரு நபரை மிரட்டிய வழக்கில்தான் தேடப்பட்டு ஆந்திராவில் கைதானான்.

அவனை சென்னைக்கு தூக்கிட்டு வந்து, ஆயுத புழக்கம் பற்றி விசாரிச்சுட்டு, அக்கரை பகுதிக்கு ஒரு ஃபார்மாலிடிக்காக கொண்டு போனப்பதான் என்கவுன்டர்ல கொல்லப்பட்டிருக்கிறான். சென்னையில் கடந்த சில வாரங்களில் மட்டும் தொடர்ந்து 3 ரவுடிகள் போலீஸ் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பது அதிர வைக்குதுதான். ஆனா, ஒரு உண்மையை எல்லாரும் புரிஞ்சுக்கணும், நாங்க சுடுறது காந்தியை அல்ல. நெஞ்சில் அடிப்படை ஈரம்கூட இல்லாத மகா குரூரமான கொலைகாரன்களை.

ஆறேழு கொலை, மூன்று ஆட்கடத்தல், கணிசமான கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 39 வழக்குகள் சீசிங் ராஜா மீது இருக்குது. ஏழு முறை குண்டாஸில் கைதானவன், தமிழ்நாடு மற்றும் ஆந்திரான்னு ரெண்டு மாநில போலீஸின் தேடுதல் வேட்டையில் இருந்த இந்த படுபாதகனை என்கவுன்டர் பண்ணாம, ஜெயில்ல வெச்சு கொஞ்சுவாங்களா?" என்று நிறுத்தினார்.

கத்தியைவிட சரக்குன்னு இறங்குதே கேள்வி!

(ரத்தம் தெறிக்கும்) - எஸ்.ஷக்தி.