தமிழ்நாடு

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நடைபாதைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கம் பார்னபி சாலை, மயிலாப்பூர் டாக்டர் பி.எஸ். சிவசாமி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபாதைகள் அமைக்க 35 தொகுப்புகளாக டெண்டர் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக முன்கூட்டியே ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டதாகவும், திட்டச் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத் துறையை நேரடியாக கவனித்து வரும் முதல்வர் விஜய், 35 டெண்டர்களையும் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியும் டெண்டர்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மாநில அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளதால், மறுமதிப்பீட்டுக்குப் பிறகு புதிய டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியின் அனைத்து டெண்டர்களையும் மறுஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.