விளையாட்டு

நான் இருக்கேன்… பயப்படாதீங்க! – வெனிசுலா நிலநடுக்க நிவாரணத்திற்கு ரூ.2.08 கோடி வழங்கிய நெய்மர்!

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நான் இருக்கேன்… பயப்படாதீங்க!  – வெனிசுலா நிலநடுக்க நிவாரணத்திற்கு ரூ.2.08 கோடி வழங்கிய நெய்மர்!
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகள் இன்று (ஜூன் 29) தொடங்கியுள்ள நிலையில், உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் போட்டிகளின் மீது திரும்பியுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கரீபியன் கடலோரப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் பதிவானது. இந்த இரட்டை நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், 32 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலா சந்தித்த மிகக் கடுமையான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நெய்மர் ஜூனியர் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2.08 கோடி) நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த நிதி அவசர உணவு, சுத்தமான குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மைதானத்தில் மட்டுமல்ல, மனிதாபிமானத்திலும் தன்னுடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ள நெய்மரின் இந்த செயல், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.