சினிமா

'சல்மான் கானோட வேலை செஞ்சா... !' - JAILER பட நடிகர் மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலின் மிரட்டல் ஆடியோ !

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவும் அதன் பின்னணியில் எழுந்துள்ள கேள்விகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

'சல்மான் கானோட வேலை செஞ்சா... !' - JAILER பட நடிகர் மகன் மீது  துப்பாக்கி சூடு நடத்திய கும்பலின் மிரட்டல் ஆடியோ !
Tiger Shroff Firing Case: Lawrence Bishnoi Gang !

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் நடிகர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக ஆடியோ வெளியீடு

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஆடியோவில், அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சத்து ஆகிய இருவர் தாக்குதலுக்குத் தாங்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர். மேலும், தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கானுடன் பணியாற்றியதால் குறிவைப்பா?

ஆடியோவில் பேசியவர்கள், நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என டைகர் ஷெராப்புக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதைப் பின்பற்றாததால் அவர் தங்களது குறிவைப்புப் பட்டியலில் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளனர். மேலும், இது இறுதி எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தக் கூற்றுகள் பாலிவுட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



பிஷ்னோய் கும்பல் வெளியிட்ட ஆடியோ உரை

லாரன்ஸ் பிஷ்னோய் வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோவில் ,

" ஜெய் மகாகால்... ஜெய் ஸ்ரீ ராம்!

"இன்று டைகர் ஷெராப்புக்கு நடந்த சம்பவத்துக்கு அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகிய நாங்கள்தான் பொறுப்பேற்கிறோம். அவருக்கு போன் செய்து பேசி புரிய வைக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் இன்று அவருக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறோம்.

மும்பை சினிமா துறையில் எங்களுடைய பேச்சைக் கேட்காமல் இருப்பவர்கள் அல்லது சல்மான் கானுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள் அடுத்ததாகக் குறிவைக்கப்படுவார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்!

குறிப்பு: வேறு கும்பலைச் சேர்ந்த சில நாய்கள், எங்கள் பெயரைப் பயன்படுத்தி பிரபலமாகலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களையும் விரைவில் கொன்று, அதன் மூலம் பிரபலமாக்குவோம்.

சஹீத்களுக்கு சலாம்." என்று பதிவாகியுள்ளது.

விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறை

மும்பையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தாக்குதலின் பின்னணி, அதில் தொடர்புடையவர்கள் மற்றும் வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மை உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டைகர் ஷெராப்பிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டைகர் ஷெராப்பைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது நலம் குறித்து விசாரித்ததாகவும், அவருக்கு நம்பிக்கை அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நடிகர் சல்மான் கானுக்கு எதிரான மிரட்டல்கள் காரணமாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது டைகர் ஷெராப் தொடர்பான இந்தச் சம்பவம் பாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது காவல்துறை விசாரணையின் முடிவிலேயே முழுமையாகத் தெரியவரும்.