Chennai Rain: சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை... 10 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை: கடந்த இரு மாதங்களாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்கள் போல ஆகஸ்ட், செப்டம்பரிலும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இந்நிலையில், அக்டோபர் தொடங்கியது முதலே வடகிழக்குப் பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில் அவ்வப்போது மழைபெய்து வந்தது. ஆனால் சென்னையில் அவ்வப்போது மட்டுமே மழை பெய்தது, ஆனாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவதாக இல்லை.
இந்நிலையில், நேற்றிரவு சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழை, அதிகாலை வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம் சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் சென்னையில் இரவு முழுக்க கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு 2 மணிக்கு மேல் தொடங்கிய மழையானது, அதிகாலை 5 மணிக்கு உச்சம் தொட்டது.
வண்ணாரப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம், தியாகராயநகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் மேலும் குறைந்து சற்றே குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. அதேநேரம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இனிவரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கரூர் மாவட்டம் பள்ளபட்டியில், கனமழையின் போது கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அப்போது பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகமது உஸ்மான், எதிர்பாராத விதமாக கழிவு நீர் வாய்க்காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், சிறுவனை தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?