அரசியல்

புதிய கட்சி, புதிய வியூகம்... விஜய் பாணியை பின்பற்றும் அண்ணாமலை?

By Sumalekha
19 Jul 2026, 03:00 PM
புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
ஈயம் பூசுன மாதிரியும் தெரியணும், பூசாத மாதிரியும் இருக்கணும்...' என ‘கவுண்டர்' ரூட்டை ஃபாலோ பண்ணி பக்காவாக முதல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் அண்ணாமலை.


தமிழக பா.ஜ.க.வின் மாஜி மாநிலத் தலைவரான அண்ணாமலை, சமீபத்தில் அக்கட்சியிலிருந்து அடியோடு விலகினார். 'வீ தி லீடர்ஸ்' எனும் அமைப்பை தொடங்கியவர், அதில் இணைவோருக்கு முறையான அரசியல் கற்றுக் கொடுத்துவிட்டு அதன் பின் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். கட்சி துவங்கும் முன்பாகவே தமிழக அரசியல் தளத்தில் தனக்காக வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார் மலை. அதன் முதல் அடியாக 'போதையில்லா தமிழகம்' எனும் மாநாட்டினை கடந்த ஜூன் 12 அன்று பொள்ளாச்சியில் நடத்தினார்.

இம்மாநாடு விஷயங்களை டீ கோடிங் செய்து நம்மிடம் பேசினார்கள் அரசியல் விமர்சகர்கள்... "அண்ணாமலையின் முதல் மாநாடுக்கு எக்கச்சக்க கூட்டம்... இவர்கள், அண்ணாமலை பா.ஜ.க.வைவிட்டு வெளியேறிய பின்னால் சேர்ந்த கூட்டம் அல்ல. அவர் அங்கு இருக்கும்போதே உருவான 'அண்ணாமலையின் அன்புக் கூட்டம்' டீமில் இருந்தவர்கள்.

அரசியலில் விஜய்யைவிட சீனியர் அண்ணாமலை. இந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லுமிடமெல்லாம் விஜய்க்கு குவிந்த கூட்டத்தில் கால் பங்கு அளவுக்காவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலைக்கும் குவிந்தது. ஆனாலும், புதுக் கட்சி துவங்கும் அண்ணாமலை ஒவ்வொரு இன்ச்சிலும் விஜய்யை காப்பி அடிப்பதுதான் புரியவில்லை.

அதாவது, அரசியல் கட்சி துவக்கும் எவரும் தங்களின் முதல் மெகா நிகழ்வை சென்னையிலோ, திருச்சியிலோ, மதுரையிலோ நிகழ்த்துவார்கள். ஆனால் விஜய் விக்கிவராண்டியில் நடத்தி, ஹிட் அடித்தார். அண்ணாமலையும் அதுபோலவே கோவையில் நடத்தாமல் பொள்ளாச்சியில் நடத்தியுள்ளார். கூடிய இளைஞர்களையும், குடும்பத்தினரையும் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அண்ணாமலையை ஆதரித்து குவிந்ததோ எனும் சந்தேகம் வருகிறது.

அதேவேளையில் மாநாட்டில் இதுபோக, பிற கட்சிகள் தங்கள் நிகழ்வுகளுக்கு வழக்கமாக கூட்டி வரப்படும் 'பெய்டு' தொண்டர்களையும் இந்த மாநாட்டில் காண முடிந்தது. 'நாற்காலியே இல்லாத மேடை! நிகழ்வு முடிந்ததும் குப்பையை அகற்றிய உறுப்பினர்கள் என மாற்று முகம் காட்டியிருந்தாலும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சி வடிவமைப்பு ஏதோ கல்லூரி நிகழ்வுபோலவே இருந்தது. அதேபோல அடாவடியாக நடக்கும் தனது அமைப்பின் தன்னார்வலர்களையும் அண்ணாமலை கண்டிக்க வேண்டும்.

கரு.நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி என தாமரை கட்சியில் மலையோடு நெருங்கி நின்றவர்கள்தான் வீ தி லீடர்ஸ் அமைப்பிலும் அவரோடு கைகோத்துள்ளனர். கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளாக இருந்த பாலாஜி உத்தமராமசாமி, வசந்தகுமார் ஆகியோர் இங்கும் அவரின் வலது, இடது கரங்களாக நின்றனர். மாநாட்டில் ஒருவரை பாலாஜி ஒருமையில் பேசிய வீடியோ சர்ச்சையானது. மாநாட்டின் மேடை மற்றும் சிறப்பு காணொலியில் அண்ணாமலைக்கு நிகராக வசந்தகுமாருக்கு ஓவர் ஹைப் கொடுக்கப்பட்டதும் அமைப்பு உறுப்பினர்களை கடுப்பாக்கியுள்ளது.

அண்ணாமலை, விஜய்யின் ஃபார்முலாவை ஃபாலோ செய்வது மட்டுமல்ல, அடுத்த தேர்தல்களில் அவரோடு கூட்டணி வைக்கும் நோக்கத்திலும் இருப்பதாகவே தெரிகிறது. மாநாட்டில் பேசும்போது, 'ஆணவ அரசியல் செய்த தி.மு.க. தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது' என்றதன் மூலம் தனக்கும் தி.மு.க.வே எதிரி என்பதை விஜய்க்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

மேலும், 1 கோடியே 68 லட்சம் பேர் ஓட்டு போட்டு த.வெ.க. அரசை கொண்டுவந்துள்ளனர், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். புதிய எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களான த.வெ.க.வினர் தடுமாறுகையில் அவர்களை தட்டிக்கொடுக்க வேண்டும்' என்றெல்லாம் பேசியிருப்பது கிட்டத்தட்ட நேரடியாகவே விஜய்க்கு 'நான் உங்கள் நண்பன் ப்ரோ' என மெசேஜ் சொல்வதாகவே இருக்கிறது.

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அண்ணாமலை கட்சி துவக்கிவிடுவார் என்றே தெரிகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' எனும் மத்திய அரசின் முடிவானது வலுவாகிவரும் நிலையில், அப்படி நடந்தால் அந்த ஆண்டிலேயே தமிழகம் சட்டசபைத் தேர்தலை சந்திக்கும். ஆனால் அதற்குள் தான் அறிவித்துள்ள நலத்திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை வாங்க விஜய் அரசு தடுமாறும். அப்போது அந்த தேர்தலில் தனது படைபலத்துடன் விஜய்யோடு கைகோத்து, தி.மு.க. மீண்டும் எழாமல் பார்த்துக்கொள்வதே அண்ணாமலையின் நோக்கம்.

கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்கும் அ.தி.மு.க. புள்ளிகளை தன் கட்சியில் இணைத்துக்கொண்ட விஜய்யால் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாத அண்ணாமலையோடு கூட்டணி சேர்வதிலும், அவரோடு அதிகாரப் பகிர்வை செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால் இந்த மூவ்களெல்லாம் மலையின் சொந்த முடிவுகளா அல்லது தி.மு.க. சொல்வதுபோல் பா.ஜ.க.வின் பி டீமாக இருந்து ஆட்சிக்குள் நுழைகிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். இந்த மாநாட்டுக்கு போலீஸார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்ததோடு, அண்ணாமலைக்கு பக்காவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தனர்" என நிறுத்தினர்.

நாம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விக்னேஷிடம் இதுபற்றி கேட்டோம். தகுதியுடைய எல்லோரும் அரசியலுக்கு வருவதுதானே ஜனநாயகம். அவர் வரட்டும், கவனிப்போம்" என்றார். தி.மு.க. மாஜி அமைச்சர் நேருவிடம் கேட்டபோது, “இவரோடு அவர் கூட்டணியா? வெளங்கிடும். இவரை ஏன் கொண்டுவந்தோம்னு மக்களே ஃபீல் பண்றாங்க. இனியும் அப்படி ஒரு தப்பை தமிழக மக்கள் பண்ணமாட்டாங்க" என்றார்.

பாக்கலாங்ணா!