மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை [20-10-24] அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, லூப் சாலையில் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்களிடம் அங்கிருந்து கலைந்து போகக்கூறிய போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அப்போது, சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த ஜோடியிடம் போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் ரோந்து போலீஸாரை மிகவும் இழிவாக பேசிய, அந்த ஜோடி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த காணொளி வைரலான நிலையில், காவல்துறையினரை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகிய 2 பேரையும், ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இருவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மெரினா கடற்கரையில் காவல்துறையினரிடம் தகராறு செய்த ஜோடி, 15 வருடங்களாக இருவரும் தகாத உறவில் இருந்து வருவதாகவும், தினமும் மெரினாவில் காரில் வந்து குடிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் நடைபெற்று பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், தனலெட்சுமி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், தன் மீது தவறாக புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், தவறுக்கு தான் மன்னிப்புக் கோரியதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
What's Your Reaction?