மேஜையால் வந்த பிரச்சனை.. தவெக-திமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, அதிமுக, திமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த சட்டசபை தேர்தலில் புதிதாக தவெக கட்சி இணைந்துள்ளதால் சட்டசபை தேர்தல், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், திமுக-தவெக இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தவெக மாநாட்டில் ‘2026 சட்டசபைத் தேர்தல்தான் நம் இலக்கு’ என்று விஜய் கூறியதைத் தொடர்ந்து தொண்டர்கள் மும்முரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்களர் பட்டியல் சரிபார்க்கும் பணியும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
வாக்களார் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்தம் செய்வதற்கு வசதியாக கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதேபோல் 23 மற்றும் 24-ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைப்பெற்றது.
இதன் ஒரு பகுதியாக அயோத்தி குப்பம், லேடி வில்லிங்டன் பள்ளி எதிரே வாக்காளர் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது பல்வேறு கட்சியினர் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக கட்சி கொடி கட்டி மேஜை போட்டனர். அப்போது திமுக - தவெக இடையே மேஜை போடுவதில் பிரச்சனை ஏற்பட்டு மோதல் வரை சென்றுள்ளது.
இதையடுத்து மெரினா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடையே பேசி சமதானம் செய்து வைத்ததாகவும்,மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது நேரிடையாகவும் மோதிக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?