சாட்டையால் அடித்து பேய் ஓட்டிய காலம் போய், சரக்கு ஊத்திக் கொடுத்து பேயுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் இவர் தான், பழனி சாமியார் வைத்தியர். பெயரே வித்தியாசமாக இருக்குதே என நினைத்தால், அதையே தனது கடையின், இல்லை இல்லை... பேயோட்டும் ஃபேக்டரியின் பெயராக வைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி 2வது ரயில்வே கேட் அருகேயுள்ள காந்தி ரோடு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் வாடகைக்கு கடை எடுத்துள்ள பழனி சாமியார் வைத்தியர் என்பவர், பில்லி சூனியம், திருஷ்டி, தோஷம் கழிப்பது, மந்திரம் சொல்வது, தாயத்து கட்டுவது என சகல வித்தைகளையும் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரது உடலில், பேய் புகுத்துவிட்டதாக நினைத்து, அவரது உறவினர்கள் பழனி சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்புறம் என்ன சும்மா இருப்பாரா சாமியார்... கடைக்கு முன்பே பட்டறையைப் போட்டு தனது எல்லா சித்து விளையாட்டையும் அரங்கேற்றியுள்ளார். அந்த பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக கூறிய அவர், அவரை நடு வீதியில் அமர வைத்து, சிக்கன் பிரியாணி, கோக் மிக்ஸிங் செய்த சரக்கு, சைடிஸுக்கு சிகரெட் எல்லாம் கொடுத்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய அந்தப் பெண்ணோ, “நான் யார் சொத்துக்கும் ஆசைப்பட மாட்டேன்” என அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் பஞ்ச் வசனம் பேச, “அப்புறம் ஏன்டா அடுத்தவன் பொண்டாட்டி உடம்புல பேயா வந்து எங்க உசுர வாங்குற” என சாமியார் பாயிண்ட் பிடித்து பேசிப் பார்த்தார். ஆனாலும் பெண்ணுக்குள் நுழைந்த அந்த ஆம்பள பேய், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிடிகொடுக்காமல் சாமியாருக்கே விபூதி அடித்தது.
முக்கியமாக அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்பது கூடத் தெரியாமல், அவ்வளவு சின்ஸியராக பேய் ஓட்டிப் பார்த்தார் அந்த சாமியார். இந்த குறளி வித்தையைப் பார்த்து பேய் ஓடியதோ இல்லையோ, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.
இத்தனைக்கும் தான் பேய் ஓட்டிய வரலாற்று சம்பவத்தை, தனது செல்போனில் வளைத்து வளைத்து வீடியோ எடுத்தார், அந்த தில்லாலங்கடி சாமியார். அனைத்திலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் என உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, இன்னும் வடிவேலு ஸ்டைலில் பேயோட்டும் இந்த மாதிரியான சாமியார்களை, காவல்துறை சரியாக கவனிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்