Chennai Rain: அம்மா உணவகத்தில் இலவச உணவு ரெடி... சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி..?
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நீர் வடியாததால், 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, CB சாலை சுரங்கப் பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், MRTS சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல், மழைநீர் தேங்கியுள்ளதால் 27 சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கிறது. போகன் வில்லா, மெட்டுக்குளம், அழகப்பா சாலை, மில்லர்ஸ் சாலை, நெற்குன்றம் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து இயக்கம் மெதுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமிர்தாஞ்சன் சந்திப்பு, P.S சிவசாமி சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும், தீயணைப்பு துறை E சாலை, B சாலை வழியாக மேட்டுக்குளத்திற்கு இடையே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உள்ளிட்ட இதர உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெல்லூர் - புதுச்சேரி இடையே நாளை அதிகாலை கரையை கடக்கவுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை… — M.K.Stalin (@mkstalin) October 16, 2024
What's Your Reaction?