பாஜக மாநில செயற்குழு கூட்டம்: கள்ளக்குறிச்சி முதல் முல்லை பெரியாறு வரை... 7 தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக அடைந்த தோல்வி குறித்தும், பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jul 6, 2024 - 15:13
 0
பாஜக மாநில செயற்குழு கூட்டம்: கள்ளக்குறிச்சி முதல் முல்லை பெரியாறு வரை... 7 தீர்மானங்கள் என்னென்ன?
பாஜக செயற்குழு கூட்டம்

சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் என போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக பாஜக மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் இன்று நடந்தது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் செளகான், எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி குறித்தும், தமிழ்நாடு பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கூட்டத்தில், மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் எந்த கட்சி மீதும் இல்லாத அடக்குமுறை பாஜக மீது ஏவப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு வன்முறைகள் நடக்கின்றன.ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் நேற்று மாலை வெட்டிக் கொள்ளப்படுகிறார். பாஜகவை சேர்ந்த நதியாவின் கணவரும் வெட்டப்பட்டு  உயிருக்கு போராடி வருகிறார். 

கள்ளச்சாராயம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிப்பவர்கள் கூலிப்படை மூலம் கொல்லப்படுகின்றனர். அடுத்த 3 ஆண்டில் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். 2026ம் ஆண்டு ஏழை , விவசாயிகளுக்கான ஆட்சி அமைய வேண்டும். 

முதலமைச்சர் ஸ்டாலினால் சுயமாக முடிவெடுக்க முடிகிறதா? முதலமைச்சருக்கான திறனுடன் அவர்  இருக்கிறாரா? அவரால் தமிழகத்தை வழிநடத்த முடியுமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மருமகன்தான்  கோப்புகளை என்ன செய்ய வேண்டும்? என தன் இல்லத்தில் வைத்து முடிவெடுக்கிறார். முதலமைச்சர் வெறும் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு பார்ப்போம்:- 

* மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் வழங்கியதற்கும் பாஜக செயற்குழு கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

* கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் 

* முல்லை பெரியாரில் புதிய அணை கட்டும் முயற்சிக்கும் கேரள அரசுக்கும், மேகதாது குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

* போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் காவல்துறையின் பாரபட்சத்தை செயற்குழு கூட்டம் கண்டிக்கிறது. 

* நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட செங்கோலை அவமானப்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. 

* சாதிய மோதல்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow