அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசை பலிகடா - கார்த்தி சிதம்பரம் அதிரடி
சவுரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், “மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோட்டமாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டு. எந்த திட்டத்தில் எந்த தருணத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பட்டியலிட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கூட மோடி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று மேலோட்டமாக கூறினார்கள். எந்த திட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜவுளி பூங்காவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறினால் ஜவுளி பூங்காவிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்களா? நிதி ஒதுக்கி எந்த வகையில் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும் அவ்வாறு சொன்னார்கள் என்றால் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலுக்கு முன்னால் ஒன்று கூறுகிறார். தேர்தலுக்கு பின்னால் ஒன்று கூறுகிறார். அதனால் அவர் கூறுவது தனக்கு தெரியவில்லை. புரியவில்லை. மேலோட்டமாக வைக்கப்படும் விமர்சனங்கள் தமிழ்நாடு அரசு எந்த வகையில் ஒத்துழைப்பு தரவில்லை என்பதை கூற வேண்டும். எந்த நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அதை செலவு செய்யவில்லை என்று ஆதாரப்பூர்வமாக அவர் சொன்னால் என்றால் பதில் சொல்லலாம்.
தமிழ்நாடு அரசின் பெயர் சொல்கிறார்களா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி பலர் கிராமபுறத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு நபருக்கு 100 நாள்வேலை கொடுக்காமல், ஒரு குடும்பத்திற்கு 100 நாள் கொடுக்கிறார்கள்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்களை வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இரண்டாவது நாங்கள் அவர்களுக்கு உண்டான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொன்னோம். அதையும் உயர்த்தவில்லை. இந்த நிதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை.
கல்வி கடன் வாங்கியவர்கள் கொரோனா காலத்தில் அந்த கடனை கட்ட முடியாமல் தவித்தார்கள். அதனால் அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தோம் அந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. மதிய உணவு திட்டத்திற்கும் காலை உணவுத் திட்டத்திற்கும் நிதி கேட்டிருந்தோம். பட்டினி பட்டியலில் 110வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனால் பள்ளிக்கூடம் மூலமாக உணவு உண்ணும் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை குறைத்து இருக்கிறார்கள்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சௌரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்தவரை அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகாடக்கப்பட்டார். இன்று மீண்டும் ஆளுநர் அறிவிப்பின்போது தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன்.
யாரை அமைச்சராக்க வேண்டும் யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமை. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம்? யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் தான் பிரதமருக்கும் அந்த உரிமை உள்ளது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?