தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது இசையால் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 1976-ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு பாடல்களும் எழுதி உள்ளார்.
80 வயதை கடந்த பின்னும் இன்றைய இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் இவர் இசையமைப்பில் 80-90 களில் வெளியான பாடல்கள், இன்றைய திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான ‘விடுதலை 1’, ‘விடுதலை 2’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவரது பாடல்கள் 80-90 கிட்ஸ் மட்டுமல்லாமல் 2கே கிட்ஸையும் கவரும் வகையில் உள்ளது. புதிய திரைப்படங்களுக்கு பழைய பாடல்களை பயன்படுத்தும் நிலை தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அப்படி பயன்படுத்தும் போது பழைய பாடல்களுக்கு உரிமை கோரும் பிரச்சனைகளும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா இன்று நேரில் ஆஜரானார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம், தாங்கள் உரிமம் பெற்றுள்ள பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அந்த வழக்கில் தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் உள்ள பாடல்களின் உரிமத்தை பெற்றதற்கான ஒப்பந்தம் இசையமைப்பாளர் இளையராஜா மனைவி பெயரில் உள்ள நிறுவனத்துடன் போடப்பட்டதாகவும், அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராக மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக இளையராஜா இன்று நேரில் ஆஜரானார். தொடர்ந்து, தனது தரப்பு சாட்சியங்களை சமர்ப்பித்துவிட்டு நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.