இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2011ஆம் ஆண்டு முதல், 2015ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.
பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு (Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு நேற்று (செப். 26) தீர்ப்பு வழங்கியது.
மேலும் படிக்க: பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!
இந்நிலையில் டெல்லிக்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சென்னைக்கு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் வந்தவுடன் அவரது காலில் விழுந்து வணங்கி பின்பு கண்ணீர் மல்கக் கட்டியணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது X தளத்தில், “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?