சென்னை வளசரவாக்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசிப்பவர் ரஷிதா (49). இவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வளசரவாக்கம் விஏஓ தங்கபாண்டியன் புகார் அளித்தார்.
அதன்படி ரஷிதா வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி, ரேஷ்மா (20), சந்தியா (20), சபாபதி ராதா (34) ஆகிய ஐந்து பேரையும் மீட்டனர். அவர்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பி போலீசார், வீட்டின் உரிமையாளர் ரஷிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ரேஷ்மா என்ற பெண் ஆறு வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், 17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரஷிதாவின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். சென்னையில் 5 பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.