தமிழ்நாடு

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயதான பெண் காவலர் ஒருவர் நுண்ணறிவு பிரிவு சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 16-ஆம் தேதி இரவு பணி முடிந்து சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார இரயிலில் சென்றுள்ளார்.

தொடர்ந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்ததும் நடைமேடையில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த பெண் காவலரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் காவலர் வேகமாக செல்ல முயன்ற நிலையில் அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நபரின் கையைக் கடித்த பெண் காவலர் கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்தனர்.  பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் கத்தியுடன் சுற்றிவந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதையடுத்து ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சமூக விரோத செயல்கள் ஏற்படாத வகையிலும் பழவந்தாங்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். 

ரயில்கள் வந்து பயணிகள் சுரங்கப்பாதை செல்லும் வரை பாதுகாப்பாக செல்கின்றனர். மேலும் நடைமேடையில் உள்ள நாற்காலிகளில் ரயில்கள் வந்து பயணம் செய்யாமல் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.