பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, அவர்களுக்காக இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தையும் கொண்டுவந்தது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்குப் போகும் பெண்கள் என மகளிர் அனைவருக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டது. அறிவிக்கப்பட்டது போலவே, அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்துவந்தாலும், அடுத்தடுத்து பல பஞ்சாயத்துகளும் வரிசை கட்டி வருகின்றன.
இலவசமாக பயணிக்கும் பெண்களிடம், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மரியாதை குறைவாக நடப்பதாக ஒருசில புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், தலைநகர் சென்னையில் நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் தடம் எண் 26 என்ற அரசுப் பேருந்து, வடபழனி அவிச்சி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளது. அப்போது அதில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
அப்போது பெண்கள் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அந்த சீட்டில் அமர்ந்துள்ளனர். அதுவும் ஒரே சீட்டில் மூன்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்துகொண்டு ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்களிடம், “ஏன் வயதான பெண்களை எழுப்பி விடுறீங்க என” பெண் ஒருவர் கேட்க, “ஓசி டிக்கெட்டுல தானே போறீங்க. நாங்க துட்டு கொடுத்து போறோம்” என மரியாதை குறைவாக பேசியுள்ளனர். இந்தச் சம்பவங்களை, பஸ்ஸில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் வீடியோவாக எடுக்க, அவரையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளனர் அந்த இளைஞர்கள்.
”வீடியோ எடுத்தா பயந்துருவோமா..? நாங்களும் வீடியோ எடுப்போம்” என போட்டிக்குப் போட்டியாக அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அவரை ஆபாசமாக திட்டிய அந்த இளைஞர்கள் மிரட்டும் தொணியில் பேசியது பேருந்தில் பயணித்தவர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்த அரசு, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மறந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெண்களை பேருந்து சீட்டில் இருந்து எழுப்பிவிட்ட இளைஞர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
முன்னதாக, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக பெண்களுக்கான இலவச பேருந்து அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இலவச பயணம் என்பது கட்டணமில்லா பயணம், பிறகு விடியல் பயணம் என்றெல்லாம் அப்கிரேட் செய்யப்பட்டது. ஆனால், அமைச்சர் பொன்முடி சொன்ன ’ஓசி’ என்ற ஒற்றை வார்த்தை மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பிறகு ’ஓசி’ என்ற சொல், கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை பார்த்து அடிக்கடி சொல்லும் அளவுக்கு பயன்படுத்தப்படுவதாக மகளிர் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.