வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்

“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

Aug 8, 2024 - 11:50
Aug 8, 2024 - 12:51
 0
வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்
தஞ்சை பெரிய கோயிலை பார்த்து சிலிர்த்த தமிழ் பூர்வக்குடி பெண்

வெளிநாடுகளில் உள்ள தமிழ் பூர்வக்குடி இளைஞர்களை, தமிழ்நாடு அழைத்து வந்து, பண்டைய தமிழர்கள் கட்டிய கட்டங்கள், நீர் மேலாண்மை, மொழி, ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் என கலாச்சார பரிமாற்ற சுற்றுலா நடத்தும் விதமாக ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தை கடந்தாண்டு தமிழ்நாடு அரசு தொடங்கியது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணை, பெரியக் கோயிலை சுற்றி பார்க்க, மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, மியான்மர் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து 100 பேர் இத்திட்டத்தின் கீழ் தற்போது வந்துள்ளனர். இவர்கள் 3 தலைமுறைக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வரும் தமிழ் பூர்வக்குடிகளாகும். 

இவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட “வேர்களைத் தேடி” திட்டத்தின் இரண்டாம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதாகவும் – அறிவார்ந்த அனுபவமாகவும் அமையட்டும்!” என தெரிவித்துள்ளார்.

இவர்கள் டெல்டா மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கும் கல்லணையை சுற்றிப்பார்த்தனர். இதையடுத்து மதகுகளில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய தண்ணீரை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் கல்லணை சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் விற்கப்பட்ட சோளம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். 

இந்த அனுபவம் குறித்து பேசிய கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் அமுதா, “கல்லணையை பார்த்தோம். இந்த இடத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பதை சொல்லிக் கொடுத்தார்கள். அதை நாங்கள் கற்றுக் கொண்டோம். தமிழ்நாட்டிற்கு வந்த நாங்கள் இங்கு ஒரு குடும்பமாக ஆகிவிட்டோம். அக்கா அண்ணா என்று கூப்பிட்டது சிறப்பான அனுபவமாக இருந்தது. தமிழ் வரலாற்றை நாங்கள் புரிந்து கொண்டு கற்றுக் கொண்டோம். தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்தவுடன் உடலில் ஒரு  வைப்ரேஷன் வந்தது. ஒவ்வொரு கோபுரத்தையும் பார்க்கும்பொழுது பிரமிப்பாகவும் மன நிம்மதியாகவும் இருந்தது. எங்களுக்குக் கிடைத்த இந்த அனுபவம், காலம் முழுவதும் எங்களுடன் பயணிக்கும்” என மகிழ்ச்சி தெரிவித்தார். 

மேலும் படிக்க: பேச முடியாத, பேய் பிடித்த பெண் ‘மீனா’ கொட்டுக்காளி குறி்த்து அன்னா பென் 

தொடர்ந்து பேசிய அவர், “கரிகால சோழன் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது என்றால் ரொம்ப பெரிய விஷயம். இதை நாங்கள் பார்த்தது நாங்கள் செய்த புண்ணியம். எங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு மற்ற மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க உள்ளோம்” என உற்சாகம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow