மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை.. என்ன செய்கிறது போலீஸ்?.. சீமான் ஆவேசம்!

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Jul 16, 2024 - 13:46
Jul 16, 2024 - 13:50
 0
மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை.. என்ன செய்கிறது போலீஸ்?.. சீமான் ஆவேசம்!
naam tamilar party executive assassinated

மதுரை: மதுரை மாநகர் செல்லூர் 60 அடி சாலை பகுதியில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் வடக்குதொகுதி துணைச்செயலாளராக இருந்து வந்தார். பாலசுப்ரமணியன் இன்று காலை தல்லாகுளம் காவல் நிலையம் அருகே வல்லபாய் சாலையில் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே அவர் நடந்து சென்றபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலசுப்ரமணியனை வழிமறித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓடியபோது, விடாமல் துரத்திய கும்பல் அரிவாள், கத்திகள் மூலம் பாலசுப்ரமணியனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளது.

'என்னை காப்பாற்றுங்கள்.. என்னை காப்பாற்றுங்கள்' என்று பாலசுப்ரமணியன் கதறியபடி சாலையில் ஓடியபோதும் மர்ம கும்பல் அவரை விரட்டிச் சென்று கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மதுரை தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாலசுப்பிரமணியன் அரசியல் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் பணம் வட்டிக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பணம் வாங்கும் விஷயத்தில் மிகவும் கறாராக இருந்து வந்ததும், இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆகவே பாலசுப்ரமணியன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் பிரச்சனை காரணமாக தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களின் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாலசுப்ரமணியன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். 

ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். 

எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? 

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. 

குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?

ஏற்கனவே, கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்.

அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.  இத்தோடு, தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து இக்கொடுந்துயரில் பங்கெடுக்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்'' என்று சீமான் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow