சேலம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய மகள் பிளஸ் 2 படித்து விட்டு நீட் தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்தார். திடீரென அவளை காணவில்லை. அவள், என்னுடைய பெரியப்பா மகள் வழி அக்காவின் மகனுடன், அதாவது சகோதர முறை கொண்டவனோடு காதல் வயப்பட்டு, வீட்டை விட்டு ஓடி விட்டாள்.
இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தேன். அவர்கள் பிடித்து வந்து விசாரித்தார்கள். பின்னர், குழந்தைகள் காப்பகத்தில் அடைத்தனர். சில நாட்களுக்கு பின் வீடு திரும்பியவள் மீண்டும் கடந்த செப்டம்டர் 3ஆம் தேதி சகோதரனுடன் ஓடி விட்டாள்.
இதுகுறித்து மீண்டும் புகார் செய்தேன். காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால், சட்டவிரோத காவலில் உள்ள என் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காணாமல் போன இருவரையும் கண்டுபிடித்து காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 3 முறை ஓடி விட்டனர் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். தாங்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதாகவும் கூறினர். அப்போது, நீதிமன்ற அறையில் இருந்து மூத்த வக்கீல் என்.ஜோதி, இந்து திருமணச் சட்டத்தின்படி, சகோதர சகோதரி உறவு கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடியாது. அதற்கு சட்டம் தடை விதிக்கிறது என்றார்.
இதுகுறித்து நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அதற்கு இருவரும், தாங்கள் 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவின் அடிப்படையில்தான் அண்ணன் - தங்கை உறவு வரும். 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவுக்கு திருமணச் செய்ய திருமணம் சட்டம் தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்து அந்த பெண்ணின் தாயார், மகள் காலில் விழுந்து, அண்ணனை திருமணம் செய்தது தெரிந்தால் ஊரே சிரிக்கும். அவமானம் தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்து சாகத்தான் வேண்டும் என்று அழுது புலம்பினார்.
அதற்கு அந்த இளம் பெண் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ‘‘சாகவேண்டுமென்றால் சாவு’’ என்று தாயை பார்த்து சொன்னது, நீதிபதிகள் மட்டுமல்ல நீதிமன்ற அறையில் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீதிபதிகள், இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டனர். எனவே மனுதாரரின் மகள் சட்டவிரோத காவலில் இல்லாததால், இந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் அந்த தம்பதியிடம், உங்கள் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். ஆனால், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறி அனுப்பி வைத்தனர். காவல்துறையிடமும், அந்த பெண்ணின் தாயாரிடமும், இனி இருவரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். அழுதுக் கொண்ட அந்த தாயை கண்ணை துடைத்துக் கொண்டு நீதிமன்ற அறையை விட்டு வெளியில் சென்றார்.