சென்னை சைதாப்பேட்டை சின்னமலை - வேளச்சேரி சாலையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாளையொட்டி வாழ்த்தரங்கம் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “சைதாப்பேட்டை தொகுதியோடு ஒன்றியிருக்கக்கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என்னை பேச்சாளராக வளர்த்தது சைதாப்பேட்டை தொகுதி தான். சைதாப்பேட்டை திமுகவின் தொகுதி. இத்தொகுதியில் நிற்பவர்கள் எல்லாம் பெயரும், புகழும் பெற்றவர்களாக மாறிவிடுகிறார்கள்.
என்னுடைய வரலாற்றில் ஒரு அத்தியாயம் எழுதுகிற அளவிற்கு இத்தொகுதி உள்ளது. மருத்துவத்துறை மிகவும் கடினமான துறை. கட்சிக்கு நிறைய படித்தவர்கள் வரவேண்டும் என்று அண்ணா சொல்வார். எனக்கு ஆட்சியை விட கட்சிக்கு படித்தவர்கள் வரவேண்டும் என்றார். கட்சியை அண்ணாவை விட கருணாநிதி வலிமையாக்கினார்.
அவர் காலத்தில் வந்த சோதனை வேறு யாருக்கேனும் வந்திருந்தால் சன்னியாசியாக சென்றிருப்பார்கள். ஆனால் கட்சியை மிகவலுவாக மாற்றிவிட்டார். ஸ்டாலின் பற்றி எனக்கு தெரியும். இயக்கத்தில் செயல் தலைவராகி தலைவரானார். அற்புதமான பணிகளை செய்து கட்சியினை கட்டிகாப்பாற்றி விட்டார்.
கட்சியையும் ஆட்சியையும் ஒரு சேர நடத்துவதில் கலைஞரை விட ஒரு பங்கு மேலோங்கி நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை புகழ்ந்து எனக்கு எதுவும் நடக்கபோவதில்லை. ஆனால், உண்மையை சொல்கிறேன். நிர்வாகத்தில் இராஜதந்திரத்தை ஸ்டாலின் கையாள்கிறார்.
இந்தியை இப்போது மகாராஷ்டிராவில் எதிர்கிறார்கள். பீகாரில் அவர்கள் மொழி அழிந்துவிட்டது என்கிறார்கள். ஆட்சி முறையை பொறுத்தவரையில் எதிரிகள் எதிர்ப்பார்த்ததை விட ஏன் பிரதமர் எதிர்பார்த்ததை விட மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகிறார்.
நான் இருக்கிறேனோ இல்லையோ இன்னும் 25 ஆண்டுகள் கட்சி ஆட்சியில் இருக்கும், என் தலைவன் இருப்பார். மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவேண்டும். திருவிழா வானவேடிக்கை போல் சிறு சிறு கட்சிகள் வருவார்கள். இது கட்சி, அது கூட்டம். இங்கு உயிரை கொடுப்பார்கள் அங்கு கொடுக்கமாட்டார்கள். தேர்தல் வர வர அக்கட்சிகள் எல்லாம் கரைந்து விடும் மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார்” என்று பேசினார்.