விஜய் அரசியலில் எம்ஜிஆர் கிடையாது.. முதல்ல இதை செய்யனும்.. பாஜக நிர்வாகி கருத்து

எம்ஜிஆர் போல் விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024 - 21:17
Sep 11, 2024 - 21:22
 0
விஜய் அரசியலில் எம்ஜிஆர் கிடையாது.. முதல்ல இதை செய்யனும்.. பாஜக நிர்வாகி கருத்து
எம்.ஜி.ஆர் மற்றும் விஜய்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான பாடங்களை கற்றுக்கொள்ள அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அண்ணாமலை தமிழகம் வந்த பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் வரும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை மக்களால் தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

மேலும் பேசிய அவர், “அதிமுகவில் தற்போது நல்ல தலைவர்கள் இல்லை. ஆனால், பாஜகவில் இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். மத்தியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் இருக்கிறார்கள். மோடி மீது நம்பிக்கை வைத்துதான் மக்கள் வாக்களித்துள்ளனர். டெல்லியை தவிர மற்ற மாநிலங்களில், ஒரு ஐபிஎஸ் அதிகாரி இதுவரை முதல்வராக வந்ததில்லை. ஆனால் அண்ணாமலை அதை நிறைவேற்றுவார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எம்.எஸ்.ஷா, “எம்ஜிஆருக்கு பிறகு சிவாஜி கட்சி தொடங்கினார். ஆனால் சிவாஜியால் எம்எல்ஏ-வாக கூடவெற்றி பெற முடியவில்லை. எம்ஜிஆர் போல, அரசியல் பின்புலம் நடிகர் விஜய்க்கு கிடையாது. அரசியல் பின்புலம் இல்லாமல், அனுபவம் இல்லாமல் கட்சி தொடங்கிய விஜய் மக்களுக்கு முதலில் சேவை ஆற்ற வேண்டும்.

அதில் மக்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே தலைவராக வர முடியும். ஒரு சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும் லஞ்ச  லாவண்யம் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் எண்ணம், அதிமுகவிற்கு கூட இல்லை. ஆனால் அண்ணாமலையிடம் எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் உள்ளது” என தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, பாஜகவில் ஒரு சாரார் வரவேற்றுள்ள நிலையில், ஒரு சாரார் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ‘திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக் கழகம், அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சியைதான் பாதிக்கும்” என்று தெரிவித்தார். அதாவது நடிகர் விஜய், திராவிடக் கொள்கையுடன் தான் கட்சி நடத்துவார் என்று முன்கூட்டியே கணித்திருந்தார்.

அதே சமயம், பாஜக தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், “புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதற்கு, வாழ்த்துக்கள் என்றும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இந்த சேவை பொது மக்களுக்கு முழுமையாக இருக்க வேண்டும்” என்றும் வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow