தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை... ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி குற்றச்சாட்டு!

''தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், நமக்கு என்ன நிலை ஏற்படும்? என எளிய மக்கள் அஞ்சுகின்றனர். ஆகேவ சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்''

Jul 7, 2024 - 11:46
 0
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை... ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி குற்றச்சாட்டு!
மாயாவதி அஞ்சலி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு அயனாவரத்தில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது.

இந்த படுகொலை இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது' என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என திரையுலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான மாயாவதி இன்று நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உ.பி.யில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கு இருந்து கார் மூலம் சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளிக்கு வந்தார். பின்பு ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்த்து கண்கலங்கிய அவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மாயாவதி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை கட்டிப்பிடித்தும், அவரது தலையில் கீழ் கை வைத்தும் அவரை தேற்றினார். ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையின் மீது கைவைத்து அவர் பேசியது அனைவரது கண்களையும் குளமாக்கியது.

பின்பு அங்கு இருந்தவர்கள் மத்தியில் பேசிய மாயாவதி, ''ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆம்ஸ்ட்ராங் அம்பேத்கரின் புகழை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க பாடுபட்டவர். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்தவர்'' என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மாயாவதி, தமிழ்நாடு அரசை மிக கடுமையாக சாடினார். இது தொடர்பாக பேசிய அவர், ''தனது வீட்டுக்கு வெளியே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பது தெரிகிறது.

தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை என்றால், நமக்கு என்ன நிலை ஏற்படும்? என எளிய மக்கள் அஞ்சுகின்றனர். ஆகேவ சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று மாயாவதி கோரிக்கை விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow